விழுப்புரம்: சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளைக் கடத்த முயற்சிப்பது போன்ற போலியான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேமாக பரவி வருகிறது. இந்த போலியான காணொளிகளை நம்பி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் திருநங்கையை மின்கம்பத்தில் கட்டிவைத்து மானபங்கப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து நேற்றுமுன் தினம் சென்னை திருவெற்றியூரில் வட மாநில இளைஞரைக் குழந்தை கடத்த வந்ததாகக் கூறி பொதுமக்கள் அவரைத் தாக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. இதையடுத்து, குழந்தை கடத்தப்படுவதாகப் பரவும் தகவல் வதந்தி எனச் சென்னை பெருநகர காவல்துறை ஏற்கனவே, விளக்கமளித்திருந்தது. மேலும், இதுதொடர்பான வதந்தியைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.
இதேபோல், விழுப்புரம் மாவட்டத்திலும் போலியான செய்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்து குறிப்பில்,"விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை பதிவு கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் குழந்தை கடத்தல் செய்வதாகவும் குறிப்பாக கண்டாச்சிபுரம், மரக்காணம், அனந்தபுரம், செஞ்சி மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் அதிவேகமாக உண்மைக்கு மாறான தகவல்கள் பேசப்பட்டும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பி வருகின்றனர்.
-
தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என பரப்பப்படும் இந்த வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என 'உண்மை சரிபார்ப்புக் குழு' கேட்டுக்கொள்கிறது.
— TN Fact Check (@tn_factcheck) February 26, 2024
தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும்.
Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/rrzQ9Rd3wv
இவ்வாறான குழந்தை கடத்தல் பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானது. இதுவரை குழந்தைகள் காணாமல் போனது, கடத்தப்பட்டது பற்றிய எந்த ஒரு புகாரோ, தகவலோ வரவில்லை. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம் அடையத் தேவையில்லை. குழந்தைகளைக் கடத்துவதாக வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் போலியானவை.
பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் யாரும் பகிரவேண்டாம். மேலும், அவ்வாறு பகிர்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அவசர உதவி எண் 100 (அ) காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981-81229 என்ற எண்ணிற்குத் தொடர்புகொள்ளவும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலை; வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - மு.க.ஸ்டாலின் வரவேற்பு!