சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவி என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனது இருசக்கர வாகனத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்குச் சென்றுள்ளார். அப்போது, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்த தேவி முயற்சித்த போது, பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த போது, அவரின் இடது கை மீது அரசுப் பேருந்து ஏறி இறங்கி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக திரூவாரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், முறையாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தேவி மனுத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், மனு ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் சார்பில் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் பெண்ணின் மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஒரு மாதத்தில் மூன்று லட்சம் ரூபாயை அரசு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகையை சம்பந்தப்பட்ட மூன்று போலீசாரிடம் இருந்து வசூலிக்கவும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய விவகாரம்; காவலர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்! - HRC Ordered A Fine Of Rs 1 Lakh