சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, மே 10ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையில் 4,107 மையங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள 12 ஆயிரத்து 616 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும் எழுத உள்ளனர். சிறைவாசிகள் 235 பேரும் தேர்வினை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in அல்லது https://results.digilocker.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்களும் அனுப்பப்பட உள்ளது. நூலகங்களில் கட்டணமின்றியும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் 100 MBPS வேகத்தில் இணையதள வசதி! - Internet In TN Govt Schools