சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனியப்பன் ஆகியோர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், "அனைத்து அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான வங்கிக் கணக்குகளை பள்ளியிலேயே தொடங்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
மேலும், "பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக, பல்வேறு திட்டங்கள் வகுத்து முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவலையில், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில எதுவாக, உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த உதவித் தொகை மற்றும் ஊக்கத்தொகை உரிய மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், நேரடிப் பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்திடும் முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) செய்வதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு புதியதாக துவங்குவதற்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் வங்கிகள் பணிகள் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.
5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் முதல் 10 வயது உள்ள குழந்தைகளுக்கு வங்கித் கணக்கு துவங்குவதற்கு ஆதார் கட்டாயமானதாகும். இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு துவங்குதல் என்பது மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் இணைக் கணக்காகவே துவங்கப்படும்.
இந்த இணைக் கணக்கினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பராமரிக்கத்தக்க வகையிலேயே இருக்கும். இந்த இணைக் கணக்கிற்கு ஆரம்பத் தொகை ஏதுமில்லாத வகையிலேயே துவங்கப்படும். இத்தகைய கணக்கு துவங்கும் போது, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் ஆதார் எண்களை இணைக்க இயலாது.
மேலும், 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளும் நிகழ்வில் மட்டுமே குழந்தைகளின் முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள் பதிவு மேற்கொள்ளப்படும். இந்த விவரங்களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆதார் எண்கள் மட்டுமே வங்கிக் கணக்கு துவங்கும் போது இணைக்கத்தக்கதாக இருக்கும்.
எனவே மேற்குறிப்பிட்டது போல் ஒவ்வொரு குழந்தைக்குமான விவரங்களைப் பெற்றுத் தர வேண்டும். மேலும், 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான புதிய வங்கிக் கணக்குகளை துவக்கிடுவதற்கு மாணவனின் ஆதார் அட்டை நகல், மாணவனின் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (தேவையெனில் மட்டும்), குழந்தைகளின் ஆதார் பதிவு விவரங்கள் தயார்நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் விவரங்கள், செல்போன் எண் விவரங்களுடன் தயார்நிலையில் வைத்திருத்தல் வேண்டும். வங்கிக் கணக்கிணை துவக்கிடுவதற்கான படிவங்களையும் உரிய விவரங்களுடன் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். பள்ளிக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களின் விவரங்கள் வைத்தல் வேண்டும்.
வங்கி கணக்குகளின் தகவல் உட்பட தேவையான தகவல்களை பள்ளியளவில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். மாநிலத் திட்ட இயக்குநர் ஆதார் பதிவு மேற்கொள்வதற்கான பணிகளின் பதிவாளராகச் செயல்படுவார். கல்வித் தகவல் மேலாண்மை (EMIS) தளத்தில் உள்ள வங்கிக் கணக்கு துவக்குதல் குழந்தைகளின் விவரங்களை, மாவட்டங்கள் வாரியாக பள்ளிகளின் எண்ணிக்கை கண்டறிந்து
பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் தனியார் பள்ளி இயக்ககங்களிடம் வழங்கி பள்ளிகளில் வங்கிக் கணக்கு துவக்குதல் உறுதி செய்வார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு துவங்குதல் மற்றும் ஆதார் விபரம் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டதை உறுதிச் செய்வது தலைமை ஆசிரியரின் பொறுப்பாகும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருடன் படம் பார்க்க நரிக்குறவர் மக்களுக்கு மறுப்பு.. அதிகாரிகளின் நடவடிக்கை - முடிவு என்ன?