சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 19 நாட்கள் போராடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பிறப்பதிகளை பிடித்தம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் மருத்துவ விடுப்பு தவிர பிற விடுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும், 19 நாட்களுக்கான சம்பளம் உட்பட பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் சுமார் 20,000 மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். இவர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் போராட்டம் நடத்திவிட்டு பள்ளி திறந்தவுடன் பள்ளிக்கு சென்று பாடம் எடுத்து வந்தனர்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளவாறு தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து அரசு ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைத்து, விரைவில் அதற்குரிய தீர்வு காணப்படும் என அறிவித்தது. இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றனர்.
ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 8ம் தேதி வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு எந்தவித ஊதிய பிடித்தமும் செய்யப்பட மாட்டாது என கூறியதாக போராட்டக் குழு தெரிவித்தது.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், "திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டம், வடமதுரை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு தகவலின்றி பணிக்கு வருகை புரியாத நாள்களை ஈட்டிய விடுப்பாக அனுமதிக்க தெளிவுரை வேண்டி கருத்துரு பெறப்பட்டுள்ளது.
கருத்துரு பரிசீலனை செய்யப்பட்டது அரசுக் கடிதத்தில் தெரிவித்துள்ள படி மருத்துவ விடுப்பு தவிர பிற விடுப்புகள் அனுமதிக்கக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையை தற்போதைய நிலையில் ஏற்க இயலாது என வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் (19.2.2024 முதல் 8.3.2024 வரை) கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் மேலும் 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகள் ஊதியத்தில் ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "பாஜக வீட்டுக்கும் கேடு.. நாட்டுக்கும் கேடு.." - விமர்சனம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - Lok Sabha Election 2024