சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 20) துவங்கிய நிலையில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் மற்றும் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கபட்டு, பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, இன்று (ஜூன் 21) காலை 10 மணிக்கு பேரவை அலுவல்கள் துவங்க உள்ள நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. காலை நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
மேலும், இந்த விவாதத்தில் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்த பின்னர் அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன் ஆகியோர் பதிலுரை நிகழ்த்த உள்ளனர். அதன் பின்னர், துறை ரீதியிலான பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
அதற்கு முன்னதாக கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் உரிய பதிலளித்து விளக்கம் அளிக்க உள்ளனர். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை மாலை 5 மணிக்கு கூட உள்ளது. அப்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இதில், சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்த பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் பதிலுரை ஆற்றி துறைசார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர். மேலும், பேரவையில் மாலை அலுவல்களில் கேள்வி நேரம் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
இக்கூட்டத் தொடரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு கேள்விகளை அரசுக்கு எதிராக எழுப்ப உள்ளதாக தெரியவருகிறது.