சென்னை: திருவள்ளூரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்டதும், விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை தொடக்கக்கல்வித் துறை கண்டுபிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதற்கு உதவியாக இருந்து அதிகாரிகள், ஆசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் அரசுச் செயலாளர் மதுமதி பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்டந்தோறும் துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அடங்கிய குழுவை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகள் மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். மாதத்திற்கு ஒருமுறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் ஆய்வு செய்து அறிக்கையை 5ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையிம் படிங்க: டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்கள் திருத்தம்; விரைவில் வருகிறது புதிய நடைமுறை!
மேலும், தொடக்கக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும், 6 முதல் 8 ம் வகுப்பு வரையில் கணக்கு மற்றும் மாெழி திறன்கள், காலை உணவுத்திட்டம், எமிஸ் இணையத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் விபரத்தை பதிவு செய்தல், ஆசிரியர் காலிப் பணியிடம் விபரம், எமிஸ் தகவலுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்தல், விளையாட்டுச் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த கல்வி உள்ளிட்டவற்றை ஆய்வுச் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தல், பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்வதுடன், கூடுதல் தேவையையும் கண்டறிய வேண்டும். ஆய்வகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள நிமயனமத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை ஆய்வு செய்ய வேண்டும்” உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.