சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதித் துறைக்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
புதிய அறிவிப்புகள் :
- நிதித்துறை மற்றும் கருவூலக் கணக்குத் துறை அலுவலர்களின் திறனை மேம்படுத்த தேவையான பயிற்சி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI), இந்திய நிறுவனங்களின் செயலாளர்கள் கழகம் (ICSI), சென்னை பொருளியல் கல்வி கழகம், சென்னை கணித அறிவியல் கழகம் மற்றும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (IIM) ஆகிய நிறுவனங்கள் மூலமாக ரூ.1.50 கோடி செலவில் நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும். இதனால் சுமார் ஆயிரம் அலுவலர்கள் பயன்பெறுவர்.
- கருவூலக் கணக்குத் துறையின் அனைத்து மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு பட்டியல் ஏற்பளிப்பு அல்லது அனுமதி வழங்கும் பயிற்சி, தகவல் தொழில்நுட்பத்துடன்கூடிய மின்னாளுமை பயிற்சி வழங்கப்படும்.
- மேலும், துறைசார்ந்த அனைத்து விதிகள் மற்றும் தணிக்கை தொடர்பான பயிற்சி நடப்பாண்டில் ரூ.50 செலவில் வழங்கப்படும்.
- நிதித்துறை மற்றும் கருவூலக் கணக்குத் துறை அலுவலர்களின் நிதி மேலாண்மை மற்றும் தரவுப்பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்தும் வகையில், உரிய பயிற்சி வழங்க சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
- ரிசர்வ் வங்கி, மாநில கணக்காயர் மற்றும் அனைத்து பயனர் துறைகளை ஒருங்கிணைத்து செயல்படும் வகையில், கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இணைய கருவூலம் அமைக்கப்படும்.
- தற்போதைய நடைமுறைக்கு ஏற்ற வகையில், அனைத்து திருத்தங்களுடன் தமிழ்நாடு நிதி விதித் தொகுப்பு திருத்தி எழுதி பதிப்பிக்கப்படும்.
- அரசுத்துறை மற்றும் முகமைகள் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் இலக்குகளை அடைந்துள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்திட செயல்திறன் தணிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்கென தலைமைத் தணிக்கை இயக்குநர் அலுவலகத்தில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
- செயல்திறன் தணிக்கை முடிவுகளை ஆராய்ந்து திட்டச் செயலாக்கத்தில் உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசளவில் சிறப்புக் குழு அமைக்கப்படும். வரும் நடப்பாண்டில் 40 கருப்பொருள்களில் செயல்திறன் தணிக்கை மேற்கொள்ளப்படும்.
- உயர்நிலை தணிக்கை அலுவலர்களுக்கு துறைசார் புலமை, தரவுப்பகுப்பாய்வு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.
- அரசு அலுவலகங்களின் நடைமுறைகள், திட்டங்கள், திட்டச் செயலாக்கம் பரந்து விரிந்து தணிக்கைச்சுழல் கடினமடைந்து வருவதாலும் பொதுமக்கள் உள்ளிட்ட பங்குதாரர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் விரிவடைந்து வருவதாலும், தணிக்கை துறைகளில் புதிதாக நியமனமாகும் அனைவருக்கும் வழங்கப்படும் அடிப்படைப் பயிற்சியை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப தணிக்கை, செயல்திறன் தணிக்கை, பணித் தணிக்கை, ஒப்பந்த தணிக்கை குறித்து அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும்.
- பணிபுரியும் மற்றும் புதியதாக பணி நியமனமாகும் தணிக்கை அலுவலர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பயிற்சி கொடுக்கப்படும்.
இதையும் படிங்க: ரூ.211 கோடியில் 2 புதிய துணை மின் நிலையங்கள் - மின்சாரத்துறையில் 19 புதிய அறிவிப்புகள்! - TN Assembly 2024