சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
அதன் அடிப்படையில், 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், ரூ.102 கோடியிலும்; 10 ஆயிரம் பேர்கள் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் ரூ.172 கோடியிலும்; கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ரூ.106 கோடியிலும் அமைய உள்ளது.
இதையும் படிங்க: கான்கிரீட் காடுகளுக்கு மத்தியில் பசுமை பூங்கா.. கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் எழுப்பும் சர்ச்சைகள்!
இதுமட்டும் அல்லாது, இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவற்றுக்கான பணிகள் ரூ.105 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனைத் தவிர்த்து, 2025ஆம் ஆண்டு இறுதி அல்லது 2026ஆம் ஆண்டு தொடக்கத்திற்குள்ளாக இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்