சென்னை: 2024-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில், மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. தன்னை சிறப்பு பிரிவினராக கருதவில்லை. இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது எனக் கூறி, கால்நடை மருத்துவ படிப்பில் தனக்கு இடம் வழங்க கோரி திருநங்கை நிவேதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, திருநங்கை நிவேதா நவ. 25 ம் தேதி கால்நடை பல்கலைக்கழக பதிவாளரை சந்தித்து, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை அளிக்கவும், அவர் அளித்த விண்ணப்பத்தை பெற்று மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கும் படி தமிழ்நாடு கால்நடை விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இதையும் படிங்க: மருத்துவரிடம் பிழைத்து வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டி... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்கும் கோர்ட்!
அதேசமயம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசின் 5 துறைகள் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், அனைத்து துறைகளின் ஒப்புதல் பெற்று கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மூன்றாம் பாலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க கொள்கை முடிவு எடுப்பது தொடர்பாக அரசின் பரிசீலனை செய்து வருவதால், இது குறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுத் தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, கொள்கை முடிவு எடுக்க தமிழ்நாடு அரசுக்கு 6 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்