திருவாரூர்: தமிழ்நாடு காவிரி விவசாயிகளின் சங்கத்தின் மாநிலக் குழு அவசரக் கூட்டம், திருவாரூரில் உள்ள தனியார் அரங்கில் காவேரி விவசாய நல சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச மறுப்பது கண்டிக்கத்தக்கது. பிரதமர் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில், குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிரந்தரச் சட்டம் வேண்டும். துப்பாக்கியை வைத்து விவசாயிகளைச் சுட்டுத் தள்ளுவதைத் தமிழ்நாடு காவிரி விவசாயச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். லக்கிம்பூரில் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும், லக்கிம்பூரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு நீதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றனர். ஆனால் அவர்கள் அழைத்துப் பேச மத்திய அரசு முன்வராமல், ராணுவத்தை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.
கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் கடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், அதனைக் காரணம் காட்டி விவசாயிகள் போராட்டத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது. உடனடியாக அழைத்துப் பேசி தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழ்நாட்டில் சுமார் 100 இடங்களில், வரும் மார்ச் 10ஆம் தேதி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.
மேலும் காவிரி பிரச்சனையில் 2 ஆண்டு காலமாக கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும், மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்வதும் சட்டவிரோதம் எனத் தெரிந்தும் தொடர்கிறது. இதனைத் தட்டிக் கேட்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் வாய் மூடி மௌனமாக இருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது.
மேகதாது அணை கட்டுமானத்தை ஆதரிக்கும் வகையில் மேலாண்மை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து காவேரி பிரச்சனையில் துரோகம் இழைப்பதைக் கண்டித்தும் வரும் மார்ச் 15ஆம் தேதி காவேரி டெல்டா தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் திருவாரூரில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விளவங்கோடு தொகுதி எங்களுடையது.. செல்வப்பெருந்தகை பேச்சு!