சென்னை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த மாதம் 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக சுற்றறிக்கை வெளியானது.
இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 19 நாட்கள் போராடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் கிடையாது எனவும் ஈட்டிய விடுப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசின் உத்தரவு மீறி தன்னிச்சையாக சுற்றறிக்கை அனுப்பிய ஒட்டன்சத்திரம் மாவட்ட கல்வி அலுவலர் சுரேஷ்பாபு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறும் பொழுது, "சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு பேச்சுவார்த்தையின் பொழுது கூறியபடி ஈட்டிய விடுப்பு விண்ணப்பம் வழங்கிய ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. எந்த ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என துறை சார்பில் கூறியிருந்தோம்.
ஆனால், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 19 நாள் சம்பளம் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து விசாரணை செய்தோம். அப்பொழுது அவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விளக்கம் கேட்டதின் அடிப்படையில் அளித்ததாக கூறினார்.
எனவே தொடக்கக் கல்வி அலுவலர் பொறுப்பில் இருந்த அவரை பணி நீக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்றார். ஏற்கனவே, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டம், வடமதுரை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு தகவலின்றி பணிக்கு வருகை புரியாத நாள்களை ஈட்டிய விடுப்பாக அனுமதிக்க தெளிவுரை வேண்டி கருத்துரு பெறப்பட்டுள்ளது.
கருத்துரு பரிசீலனை செய்யப்பட்டு அரசுக்கடிதத்தில் தெரிவித்துள்ள படி மருத்துவ விடுப்பு தவிர பிற விடுப்புகள் அனுமதிக்கக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையை தற்போதைய நிலையில் ஏற்க இயலாது என வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு, போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் மேலும் 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகள் ஊதியத்தில் ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.