சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு எழுதி உள்ள மடலில், "அரசின் ஒவ்வொரு திட்டமும், செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையான பயன்களைத் தருவதை உறுதி செய்வதற்காக முதலமைச்சர் என்ற முறையில் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதை அக்டோபர் 22ம் நாள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அறிவித்தேன்.
அதன்படியே கடந்த நவ 5, 6 இரண்டு நாட்களிலும் கோயம்புத்தூரில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளப் பயணமானேன். அங்கு, நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் - இளைஞர்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். புன்னகைத்து, கையசைத்து, 'அடுத்ததும் உங்க ஆட்சிதான்' என்று மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காலத்திற்கேற்ற வளர்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி ஐ.டி. காரிடார் (ஓ.எம்.ஆர். சாலை) போல கோயம்புத்தூரில் டைடல் பூங்கா பகுதி தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த இளைஞர்களின் வாழ்வுக்கு வளமான எதிர்காலத்தைக் கட்டமைத்துத் தரும் இடமாக இன்று உருவாகியுள்ளது.
நில எடுப்பு விலக்களிப்பு ஆணை : கோயம்புத்தூர் வடக்கு வட்டத்திலும், தெற்கு வட்டத்திலும் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு 5,386 குடும்பங்கள் பயனடையும் வாய்ப்பு உருவானது. தங்களுக்குரிய நிலத்தை விற்கவும், வாங்கவும், முடியாமல் பல ஆண்டுகளாக தவித்த மக்களுக்குத் திராவிட மாடல் அரசு வழங்கிய நிம்மதிப் பரிசுதான் இந்த நில எடுப்பு விலக்களிப்பு ஆணை.
மக்கள் பணியே இலட்சியம்! மறுபடியும் கழக ஆட்சி நிச்சயம்!
— DMK (@arivalayam) November 7, 2024
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் “உங்களில் ஒருவன்” மடல்#DMK4TN pic.twitter.com/FTyaeVQ1Wt
அதனை வழங்குகிற விழாவில் துறையின் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும் பங்கேற்றார். விலக்களிப்பு ஆணைகளைப் பெற்றுக் கொண்ட மக்களின் நன்றி அவர்களின் கண்களில் துளிர்த்ததைக் கண்டேன். காலை நிகழ்வுகளை முடித்துக் கொண்டு மதிய உணவுக்காக சர்க்யூட் ஹவுஸ் செல்லும்போது, தங்க நகை உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு ஒன்றை நம்பிக்கையுடன் அளித்தனர்.
இதையும் படிங்க : ‘கம்பேக்’ கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.. மு.க.ஸ்டாலின் பேச்சு!
அது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து உலக அளவில் தங்க நகைகள் தயாரிப்பில் முக்கிய மையமாக விளங்கும் குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் 126 கோடி ரூபாய் செலவில் தொழில் வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டேன். குறிச்சி தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்குவதற்காக விடுதிகளையும் நேரில் ஆய்வு செய்தேன். நவம்பர் 6 அன்று மாலை கோயம்புத்தூரைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாநகர - நகரச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் என கோவையின் 10 தொகுதிகளை உள்ளடக்கிய நிர்வாகிகளுடனான கலந்தாய்வினை நடத்தினேன்.
கோயம்புத்தூரின் இரண்டு நாள் நிகழ்வுகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னின்று ஏற்பாடு செய்திருந்த விதம், எடுத்துக்கொண்ட அக்கறை, செயலாற்றலில் வெளிப்பட்ட துல்லியம் இவை அனைத்தும் நமக்கு எந்தளவு மகிழ்ச்சி தருகிறதோ, அதே அளவுக்கு அரசியல் எதிரிகளுக்கு அதிர்ச்சியையும் தருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவே கருதுகிறேன். மக்கள் பணியை லட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்.
பெரியார் நூலகம் : நவம்பர் 6ம் நாள் அரசு திட்டங்கள் தொடர்பான கலந்தாய்வு நிகழ்வாக கோயம்புத்தூரில் புதிய நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. மக்களின் பேரன்பில் மாவட்ட கள ஆய்வு மகிழ்வாக அமைந்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை வழங்கி, நவம்பர் 9, 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியினை மேற்கொள்கிறேன். கோவையில் தொடங்கினேன்..தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன்" என அதில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்