சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (சனிக்கிழமை) மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
பின்னர், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலுரை, “நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றியைப் பெற்று பேரவைக்கு வந்துள்ளோம். திமுக அரசை விமர்சித்தும்தான் தேர்தல் களத்தில் எதிர்கட்சிகள் அதிகம் பேசினார்கள். திமுக அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இந்த தேர்தல் முடிவு காண்பிக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளோம். அதற்கான அங்கீகாரத்தை வாக்குகள் மூலமாக மக்கள் நமக்கு அளித்துள்ளனர். வரும் இரண்டாண்டு காலமும் இதே போன்ற ஈடு இணையற்ற திட்டங்களைத் தீட்டி 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். திமுக அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பேரில் இதனை துணிச்சலுடன் சொல்கிறேன்.
அதிமுக தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம் தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது. கடந்த ஜூன் 19ஆம் தேதி கள்ளக்குறிச்சி விவகாரத்தை கேள்விப்பட்டதும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அது குறித்து இதே அவையில் 20ஆம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன்.
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கான உண்மையான காரணம் அறிய உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைத்தேன். சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டேன். அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் இதுவரையில் 20க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும், கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் குற்றவாளிகள் கைது நடவடிக்கைகள் தீவிரமாக தொடர்கிறது. இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைப் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி கொண்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்