சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக இணை அமைச்சர் சாந்தனு தாகூர் கொல்கத்தாவில், "ஒரு வார காலகட்டத்தில் CAA சட்டம் அமல்படுத்தப்படும்" என்று தெரிவித்து இருந்தார். இதற்கு நாடு முழுவது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் CAA சட்டத்தை ஒருபோதும் தமிழ்நாட்டில் கால் வைக்க விடமாட்டோம் என்று தனது X பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
இலங்கை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான CAA சட்டம் கொண்டு வருவதற்கு, நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததே இதற்கெல்லாம் முழுமுதற் காரணமாகும். அப்போது எதிர்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரியளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் மக்களிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக.
இது மட்டுமின்றி, 2021-ல் ஆட்சி பொறுப்பேற்ற உடனே CAA சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. மத நல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும் அதற்கு துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
உறுதியாகச் சொல்கிறேன், தமிழ்நாட்டினுள் CAA-வை கால்வைக்க விடமாட்டோம்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #NoCAAInTamilNadu என்ற ஹாஸ்டேக்கை தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: ஸ்பெயினின் ரோக்கா நிறுவனம் தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு!