சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கைவண்ணத்தில் உருவான இராமானுஜரின் 'மதத்தில் புரட்சி செய்த மகான்’ என்ற தொலைக்காட்சி தொடரை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பகப் பிரிவு வாயிலாக நூலாக்கம் செய்யப்பட்ட 'இராமானுஜர்' எனும் நூலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பெருமானார் ஜீயர், ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ரெங்க இராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீஸ்ரீஸ்ரீ அப்பன் உலகாரிய இராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள், தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் சுகி சிவம், இராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் குட்டி பத்மினி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனை குழு உறுப்பினர் சுகி சிவம்,
”திருவனந்தபுரம் கோயிலில் ஏதோ நிறைய பொக்கிஷம் இருக்கிறது என எல்லோரும் பேசி வருகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் இராமானுஜர் என்ற பொக்கிஷம் இருப்பதை நமது பெருமையாகப் பார்க்க வேண்டும்.
அவரது வாழ்க்கையை ஒரு நாடகமாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஊடகத்தில் வெளியிட திட்டமிட்டு, தொலைக்காட்சியில் வெளியிட்டார். இன்றைக்கு அதனை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளதில் பெரும் மகிழ்ச்சி.
சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை தோளில் தூக்கி வைக்க வேண்டும் என்ற புரட்சியாளராக இருந்தவர் இராமானுஜர். இராமானுஜர் வாழ்கையை எழுத வேண்டும் என கருணாநிதிக்கு தோன்றியது ஒரு பெரிய வரப்பிரசாதம். மீனவர்களின் கைகளில் பெருமாளைக் கொடுப்பது சாதாரண விஷயமா?
ஏழை மக்களின் கைகளில் மதம் போனால் தான். மதம் பல நூற்றாண்டுகளுக்கு வாழ முடியும். படிப்பாளிகள் கைகளில் மதம் சென்றால் பல நூற்றாண்டுகளுக்கு வாழ முடியாது. இந்த கருத்தைக் கொண்டவர் தான் இராமானுஜர். அதனால் தான் கருணாநிதி அவர் குறித்து புத்தகத்தை எழுதினார்” என்று சுகி சிவம் பேசினார்.
இதையும் படிங்க: பெற்றோர் எதிர்ப்பை மீறி காவல் நிலைய வாசலில் தாலி கட்டிய 19 வயது இளைஞர்.. மயிலாடுதுறையில் பரபரப்பு! - Mayiladuthurai Youth Marriage Issue