சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றும் (டிச.9) நாளையும் (டிச.10) என இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. முதல் நாளாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகள் எழுப்பிய நிலையில் அவற்றுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
"மலட்டாற்றின் கரை பலப்படுத்தப்படுமா?":இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன், “தென்பெண்ணை ஆற்று உபரி நீர் மலட்டாற்றில் திறந்து விடப்பட்டு 13 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மலட்டாற்றின் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் சேதாரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. தென் பெண்ணை ஆற்று வெள்ளத்தால் சேதாரம் ஏற்பட்ட இடங்களில் செப்பனிடும் பணி நடக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி 40 முதல் 50 பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் சேதாரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. மேலும் மலட்டாற்றில் உடனடியாக கரைகளை பலப்படுத்த வேண்டிய தேவை இருந்தால் உடனடியாக பலப்படுத்துவோம்” என்று பதிலளித்தார்.
"உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை": இதன் பின்னர், "சோமரசன்பேட்டையில் உய்யகொண்டான் வாய்க்காலில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும்" என்று ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “உய்யகொண்டான் கால்வாய் 69 கி.மீ தூரம் சொல்கிறது, வேளாண் பாசனத்திற்கான கால்வாய் இது. இதன் மூலம் தஞ்சை திருச்சியில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் 11 மாதங்கள் பாசன வசதி பெறுகிறது.
ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கேட்டுள்ளதைப்போல் சோமரசம்பேட்டை அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது. வேண்டுமென்றால் அந்த பகுதியில் உய்யகொண்டான் கால்வாய் சீரமைத்து தரப்படும்" என்றார்.
இதையும் படிங்க: விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.. வெளியான அதிரடி அறிக்கை!
"முக்கிய ஆறுகளில் தடுப்பணை": அவரை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் தடுப்பணைகளை கட்டி அந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்த தமிழ்நாடு அரசு முன்வருமா என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "தடுப்பணை கட்டியே தீர வேண்டும் என கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்தால் அவற்றைப் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
பின், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தடுப்பணை கேட்கிறார். இந்தக் காலத்தில் பெய்யும் மழைக்கு அணையே நிற்பதில்லை; தடுப்பணை எவ்வாறு மழையை தடுக்கும். இருந்தபோதும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் அளித்தார்.
இதையடுத்து, விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், “கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. எப்போது திறக்கப்படும்?. சமீபத்தில் பெய்த மழையால் தடுப்பணை மணல் குவியலால் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதற்கு, "மழை பெய்த காரணத்தினால் தடுப்பணை பாதிக்கப்பட்டுள்ளது விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பணை திறக்கப்படும்” என்று அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.