சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் கூட்டம் நேற்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ஆரம்பத்திலேயே பேச அனுமதி கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் இரண்டாவது நாளாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உள்ளிட்டவைகள் மீதான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில், கால்நடை பராமரிப்புத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் உள்நாட்டு நாய் இனங்களின் பாதுகாப்பு மையம் 5 கோடி 95 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கால்நடை பராமரிப்புத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நாய்கள் பராமரிப்பது என்பது கலாச்சார பாரம்பரியம் சார்ந்தது. மேலும், நாட்டு நாய்கள் பாதுகாப்பது மரபியல் பரிணாம வளர்ச்சி ஆகியவை குறித்து அறிய முடியும். ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை மற்றும் கன்னி ஆகிய சிறந்த நாட்டின நாய் இனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
இந்த நாட்டின நாய்களைப் பாதுகாத்து இனப்பெருக்கம் செய்ய 1980- ஆண்டில் சென்னை சைதாப்பேட்டையில் நாய் வளர்ப்புப் பிரிவு தோற்றுவிக்கப்பட்டது. இப்பிரிவிலிருந்து பெறப்படும் நாய்க்குட்டிகள் பொதுமக்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு நிர்ணயிக்கும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை மற்றும் கோம்பை போன்ற உள்நாட்டு நாய் இனங்களின் 32 இனப்பெருக்க நாய்களை வளர்க்க ஏதுவாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட உள்நாட்டு நாய் இனங்களின் பாதுகாப்பு மையம் ரூ.5 கோடியே 95 லட்சம் செலவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீனவர்களுக்கென ஸ்பெஷலாக 23 புதிய அறிவிப்புகள்- சட்டபேரவையை கதி கலக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! - TN Assembly 2024