சென்னை: சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாயு கசிவு ஏற்பட்டதில் 35 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த நவ.04 ஆம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
அப்போது 5க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினர். இதனையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றை ஆய்வு செய்யும் மொபைல் பரிசோதனை வாகனம் பள்ளிக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து 2 நாட்கள் முழுவதுமாக காற்று பரிசோதனை செய்தனர். அதாவது பள்ளியிலிருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவிற்கு உள்ள காற்றை உரிஞ்சி அதில் உள்ள நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்யும் வகையில் தற்போது இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வழங்கிய பின்னரே பள்ளி மீண்டும் திறக்கப்படும் என தனியார்ப் பள்ளிகள் பிரிவின் இயக்குநர் முத்து பழனிசாமி தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் பெற்றோர்களுடன் பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி தலைவர் ரூத்வனிதா தலைமையில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை முதலில் திறக்கவும், 8,9,10 ஆகிய வகுப்புகள் 2 ஆம் கட்டமாக திறக்கவும், மற்ற வகுப்புகள் படிப்படியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க தெரிவித்துள்ளோம்.
பள்ளியில் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் எந்த விதமாக பாதிப்பும் இல்லை என அறிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது மீண்டும் அதனை உறுதி செய்ய 2 நாட்களாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆன்லைன் வகுப்பு நடத்தலாம் என ஆலோசனை செய்யப்பட்ட நிலையில், ஆன் லைன் வகுப்புகளே வேண்டாம் என பெருவாரியான பெற்றோர்கள் தெரிவித்துள்ளதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் இன்னும் சில நாள்களில் பள்ளி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.