திருநெல்வேலி: பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பழ வியாபாரியான இவர் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் வாழைத்தார் கடை வைத்துள்ளார். வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்களை மொத்தமாக வாங்கி அதை சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து பாளையங்கோட்டை மார்க்கெட்டிற்கு வாழைத்தார் லோடு வந்துள்ளது. அந்த லோடு இறக்கப்படும்போது வாழைத்தாருக்கு மத்தியில் குருவிக் கூடு ஒன்று இருப்பதை செந்தில்குமார் கவனித்துள்ளார்.
அப்போது அருகில் சென்று அந்த கூட்டைப் பிரித்து பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன சிறிய குஞ்சுகள் இரண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து மனம் வெம்பியுள்ளார். அந்த குருவிகளை அப்படியே வெளியே விட்டால் பூனை, நாய் போன்றவற்றால் ஆபத்து வரும் என்பதால் மனிதாபிமானத்தோடு குருவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு செய்தார்.
எனவே இரண்டு குருவிகளையும் தனது கடைக்கு எடுத்து வந்து அவற்றை பராமரித்து வளர்த்து வருகிறார். அந்த குருவியின் பெயர் புல்புல் என்பது தெரியவந்துள்ளது. கடந்த இருபது தினங்களாக செந்தில்குமார் அந்த குருவிகளுக்கு வாழைப்பழம், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்து பராமரித்து வருகிறார்.
இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில், "வாழைத்தார் லோடு வரும்போது இரண்டு குருவிகளை பார்த்தேன். அதை பார்த்தவுடன் அப்படியே விட்டுவிட எனக்கு மனமில்லை. எனவே, மனிதாபிமானத்துடன் அவற்றை எடுத்து பராமரிக்கிறேன். கடந்த 20 நாட்களாக இந்த குருவிகள் என்னிடம் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் சிறிதாக இருந்தது. தற்போது ஓரளவுக்கு குருவி வளர்ந்துள்ளது. பிற உயிர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்த பிறகு குருவிகளை வெளியே பறக்க விட வேண்டும் என்பதுதான் எனது முடிவு" என மகிழ்ச்சியோடு கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்