திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இதில் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மகாராஜா நகரைச் சேர்ந்த ஆர்த்தி சக்தி பாலா என்ற மாணவி ஒரே ஆளாக 12 தங்கப் பதக்கங்களை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதன்படி, அனாடமி பிசியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பார்மகாலஜி, மைக்ரோபயாலஜி, கம்யூனிட்டி மெடிசின், பொது மருத்துவம் என ஏழு பாடங்களிலும் முதல் மதிப்பெண்கள் பெற்று தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றார்.
மேலும், ஒட்டுமொத்தமாகவும் சிறந்த மாணவர் என்ற விருதையும், பாடப்பிரிவுகள் வாரியாகவும் மாணவிக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவி ஆர்த்தி சக்தி பாலா அடுத்தடுத்து 12 முறை மேடைக்கு வந்து சென்றதால் சபாநாயகர் அப்பாவு உள்பட அனைவரும் இம்மாணவியை வியப்போடு பார்த்தனர். மேலும், சபாநாயகர் அப்பாவு மாணவியை அழைத்து வெகுவாக பாராட்டினார். மாணவி ஆர்த்தி சக்தி பாலா கடந்த 2018ஆம் ஆண்டு பேட்ஜ்ஜைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “மாணவர்களிடையே கருத்து மோதல்கள் இருப்பது எதார்த்தம்”.. நெல்லை சம்பவம் குறித்து அப்பாவு கருத்து! - speaker appavu