சென்னை: தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் அந்த தண்ணீரை குடிக்கும் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நெல்லை மாநகரப் பகுதியில் மாநகராட்சி சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவு நீர் கூட கலக்கக்கூடாது என சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்ற அமர்வு வேதனை தெரிவித்திருந்தது. இதையடுத்து, அவசர அவசரமாக மாநகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாமன்ற கூட்டம்: இந்நிலையில், இன்று நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா, துணை மேயர் ராஜூ மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் தோளில் குடத்துடன், கையில் பதாகை ஏந்தியபடி மாமன்ற அரங்கிற்குள் நுழைந்துள்ளார்.
தொடர்ந்து, தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது, இவற்றை தான் நாம் குடிக்கிறோம். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்று கூறி குடத்துடன் தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். தொடர்ந்து தான் கொண்டு வந்த கோரிக்கை அடங்கிய பதாகையை மாநகராட்சி ஆணையர் சுகபுத்திராவிடம் வழங்கினார்.
இதையும் படிங்க: ஆரம்பிக்கும் அடைமழை காலம்.. சமாளிப்பது எப்படி? அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை!
முன்னதாக தாமிரபரணி ஆற்றில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். மேலும், மேயராக இருந்த சரவணன் பதவி காலத்தில் பவுல்ராஜ் தொடர்ச்சியாக மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி மேயர் தேர்தலில் கட்சி அறிவித்த வேட்பாளரை எதிர்த்து பவுல்ராஜ் சுயேசையாக போட்டியிட்டு சுமார் 48 சதவீதம் வாக்குகள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும், திமுக தலைமை தன்னை தற்காலிகமாக நீக்கியது. ஆனால், நாம் நிரந்தரமாக கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று நேற்று பரபரப்பு கடிதம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து ஆறாவது மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற முழக்கத்தோடு தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால், உள்ளாட்சியில் நல்லாட்சி நடக்கிறதா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. உள்ளாட்சி மாமன்ற உறுப்பினர் கூறுவதை கூட கேட்காத தலைமை எப்படி நல்லாட்சி கொடுக்கும்? நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் துனை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். கலைஞர் வழியில் பெரியார் கற்றுத் தந்த சுயமரியாதையோடு கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக விலகிக் கொண்டேன்" இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்