திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கு திமுகவின் உள்கட்சி பூசல் முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறி, மேயர் கவுன்சிலர்கள் தரப்பை சமாதானப்படுத்த திமுக தலைமை பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பலனில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் பேச்சுவார்த்தை நடத்தியும், கவுன்சிலர்கள் கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமல் ஒவ்வொரு மன்றக் கூட்டங்களிலும் மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், நெல்லை மாநகராட்சியின் 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கூட்டம் மற்றும் மாநகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் இன்று (மார்ச் 8) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி இன்று கூட்டம் தொடங்கிய நிலையில், திமுக கவுன்சிலர்கள் தாமதமாகவே கூட்டத்திற்கு வந்தனர். பின்னர், பட்ஜெட் கூட்டத்திற்கான வருகைப் பதிவேட்டில் கவுன்சிலர்கள் கையெழுத்திட்டனர். அதைத் தொடர்ந்து, வரி விதிப்பு குழுத் தலைவர் சுதா மூர்த்தி மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயரிடம் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து, மேயர் சரவணன் பட்ஜெட் உரையை வாசிக்க முயன்றபோது, அவையில் குறுக்கிட்ட கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், ‘இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் மகளிருக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறார். ஆனால், மேயர் மற்றும் துணை மேயர் நமது பெண் கவுன்சிலருக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை’ என்றார். ஆனால், மேயர் சரவணன் திருக்குறள் வாசிப்பதாகக் கூறினார்.
அதற்கு கவுன்சிலர் ரவீந்திரன் அனைவரும் வெளிநடப்பு செய்வோம் எனக் கூறினார். பின்னர் பேசிய மேயர் சரவணன், ‘முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சாலைக்கு வைக்க தீர்மானம் கொண்டு வரப் போகிறோம். எனவே, அனைவரும் அமருங்கள்’ என்றார். ஆனால், திமுக கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.
இதற்கிடையில் பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் கையெழுத்திடாததால், இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சாதாரண மன்றக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. நெல்லை மாநகராட்சி கூட்டம் தொடர்ந்து இதுபோன்று ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தமிழகப் பெண்ணின் காலில் மூன்று முறை விழுந்த பிரதமர் மோடி - காரணம் என்ன?