திருநெல்வேலி: இந்தியா கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. அந்த வகையில், நெல்லை நாடாளுமன்றத் தொகுதி, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நெல்லை காங்கிரஸ் கட்சியில் நிலவும் கடுமையான உட்கட்சி பூசல் காரணமாக, நெல்லை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பதில் மிகவும் தாமதமானது. இறுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் நெல்லை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ராபர்ட் புரூஸ் கடந்த இரண்டு தினங்களாக மாவட்டத்தில் உள்ள கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். அதிலும் குறிப்பாக, திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை நேரில் சந்தித்தார்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 31) நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருந்து ராபர்ட் புரூஸ் தனது முதல் கட்ட பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது, வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வெற்றி வேலடி விநாயகர் கோயிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதில் கலந்துகொண்ட வேட்பாளர் ராபர்ட் புரூஸ்-க்கு மலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டி 108 தேங்காய்கள் உடைத்து சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், தேங்காயை உடைக்க அருகில் மாலை அணிந்தபடி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நின்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவு" - பஞ்சாங்க கணிதர் மதன் அகத்தியர்!