திருநெல்வேலி: நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சுந்தர்ராஜன் - அஸ்வினி தம்பதியினருக்கு மனோ லட்சுமணன் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் மகனும், அபிநயா என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். தனது தாய் - தந்தை, பாட்டி, தாத்தா உள்ளிட்டோர் தினந்தோறும் தின்பண்டம் உள்ளிட்டவைகள் வாங்க கொடுக்கும் பணத்தை சிறிது, சிறிது உண்டியலில் சேமித்து வைக்கும் பழக்கத்தை இரண்டு பேரும் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும், கடந்த ஜூலை 30 ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த கோர சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து, மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, இவர்கள் இருவரும் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தாய் - தந்தையரிடம் தாங்கள் சேர்த்து வைத்த பணத்தை வயநாடு நிவாரணத்துக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 5)குழந்தைகள் இருவரும் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயனை சந்தித்து, தாங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் 4ஆயிரத்து 448 ரூபாயை கேரள பேரிடர் நிதிக்கு வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கேரள மாநில அரசுக்கு இதை அனுப்பி வைப்பதாகவும், மாணவர்கள் தொடர்ந்து இது போல் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து சிறுவர்கள் கூறுகையில், “இணையத்தில் வந்த வீடியோவை நானும் என் தங்கையும் பார்த்தோம் அதில் ஒரு சிறுவர் எங்களை போல் இருப்பவர், நிலச்சரிவில் அவரது தந்தையை இழந்தாக அழுதான், அதனால் இதுபோன்ற குழந்தைகளுக்கு எங்களின் சேமிப்பு பணத்தை கொடுத்து உதவுவதற்காக இந்த பணத்தை ஆட்சியரிடம் கொடுத்தோம். இந்த பணம் நாங்கள் அம்மா, அப்பா, பாட்டி , தாதா தின்படங்கள் வாங்கி சாப்பிட கொடுத்த காசு அதை சேமித்து வைத்தோம் அது இப்போது எங்களுக்கு மற்றவர்களுக்கு உதவ, உதவியுள்ளது” எனக் கூறினார். இவ்வாறு பேரிடர் நிவாரண நிதிகாக மாணவர்கள் திண்பண்டங்கள் சாப்பிட சேர்த்து, வைத்த சேமிப்பு பணத்தை கொடுத்திருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியடை செய்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் அடை மழைதான்.. குடை எடுக்க மறந்துடாதீங்க மக்களே!