திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி 4வது நாளான நேற்று (திங்கட்கிழமை) வரை பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "பாஜகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பாஜக தலைமை மற்றும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்தைப் பயன்படுத்துவேன்: கடந்த 25 ஆண்டுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களையும், பணிகளையும் செய்துள்ளேன். அந்த மன நிறைவோடு தான் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது.
மூன்றாவது முறையாகப் பாரத பிரதமர் மோடி பிரதமராகப் பதவி ஏற்பார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரதமர் யார் என்று கேட்டால் மோடி என்று சொல்கிறார்கள். வல்லரசாக இந்தியா உருவாக வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டங்களாக இருந்தாலும் திருநெல்வேலி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பேன்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையும் செய்யவில்லை. திருநெல்வேலிக்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. என்னை அடையாளம் காட்டிய ஜெயலலிதா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களைத் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்துவேன். தற்போது 72 வயதாகும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதிர்ச்சி இல்லாமல் பிரதமர் பற்றி இப்படிப் பேசி வருகிறார்" எனத் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரனின் ராஜ தந்திரம்?: தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், என்னை அடையாளம் காட்டிய ஜெயலலிதா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களைத் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்துவேன் என நயினார் தெரிவித்துள்ளார். அவர் இப்படிக் கூறியதை அவ்வளவு எளிதாகக் கடந்து விட முடியாது.
ஏனென்றால் அவர் தற்போது பாஜக கட்சியிலிருந்தால் கூட அடிப்படையாக அவர் ஒரு தீவிர அதிமுக தொண்டர் மற்றும் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி என்று தான் கூற வேண்டும். எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் பயணித்த நயினார் நாகேந்திரன், ஜெயலலிதாவிடமும் நல்ல பெயர் வைத்திருந்தார். குறிப்பாக ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தார். ஆனால் குறிப்பிட்ட சில காரணங்களால் பின்னாளில் ஜெயலலிதா நயினார் நாகேந்திரனைப் புறக்கணித்ததாகக் கூறப்பட்டது.
எனவே அதன் பிறகு நயினாருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. கட்சியிலும் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் ஏற்கனவே அதிருப்தியிலிருந்த நயினார் நாகேந்திரன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 7 ஆண்டுகளாக பாஜகவிலிருந்தாலும் கூட, இப்போதும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணக்கமாக உள்ளார்.
தற்போது, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதால் பழைய பழக்க வழக்கங்களை வைத்து அதிமுக வாக்குகளையும் பெற வேண்டும் என முனைப்புக் காட்டி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருந்ததால் அந்த தேர்தலில் நயினார் நாகேந்திரன் நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இம்முறை பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை.
இருப்பினும் அதிமுக வாக்குகளைப் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் நயினார் நாகேந்திரன் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களைத் தேர்தல் பரப்புரையில் நயினார் நாகேந்திரன் பயன்படுத்தினால் அவரது திட்டம் எளிதில் நிறைவேறும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்..! - 10th Public Exam In TN