திருநெல்வேலி: நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதற்காக அனைத்து கட்சிகளும் வேட்புமனுத் தாக்கல் செய்து, வேட்புமனு பரிசீலனையும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் இன்று (வெள்ளிக்கிழமை) திருநெல்வேலியில் உள்ள டவுன் ஈசான விநாயகர் கோயிலில் வழிபாடுகளை மேற்கொண்டு, மேளதாளம், கட்சியினரின் முழக்கங்கள் என ஆரவாரத்துடன் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி டவுன் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து வாக்கு சேகரித்தார். அப்போது அல்வா கடைக்காரர் ஒருவர், நயினார் நாகேந்திரனுக்கு அல்வா வழங்கியுள்ளார். அல்வாவை ருசிபார்த்த நயினார் நாகேந்திரன், அதனை அங்கிருந்த தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார். அப்போது திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்துவிட்டார் என பொதுமக்கள் பேச அந்த இடம் கலகலப்பானது.
பின்னர் பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், “பாஜக அனைத்து மக்களுக்குமான பொதுவான கட்சி. எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என அனைத்து தரப்பு பொதுமக்களும் விரும்புகின்றனர். தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் உள்ள போட்டி இந்த தேர்தலாகும். தர்மம் தான் எப்போதும் வெல்லும்.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி மக்கள் அனைவரும் தற்போது என்னை அவர்கள் வீட்டு பிள்ளையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வீட்டு பிள்ளையான நான் உங்களுக்கு நிச்சயமாக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து பணியாற்றுவேன். பிரதமர் மோடியின் திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் கொண்டு செல்லும் வகையில் என்னுடைய செயல்பாடுகள் இருக்கும்” என்று கூறி வாக்குகளைச் சேகரித்தார்.
இதையும் படிங்க: 2 நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா.. பாஜகவின் திட்டம் என்ன? - Lok Sabha Election Campaign