சிவகங்கை: "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன்மருக!" இந்த புறநானூற்றுப் பாடலின் பொருள் கடலில் செல்லும் நாவாய் எனும் மரக்கலம் காற்று இல்லாததால் மேற்கொண்டு செல்லாமல் போனாலும், கப்பலை இயக்குதற்கு உரிய பொறியியல் அறிவு பெற்ற முன்னோர்களின் வாரிசே. சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானை நோக்கி, சங்ககாலப் புலவனர் வெண்ணிக் குயத்தியார் இந்த பாடலை பாடுகிறார்.
மிளகைக் கொடுத்து தங்கம்: பண்டைக்கால சுமேரியாவிற்கும், ரோமானியத்திற்கும் வணிகத்தொடர்பை தமிழர்கள் கொண்டிருந்தனர் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கற்பனை செய்து பாருங்கள், இன்றிலிருந்து சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் பிறந்த கட்டிளம் காளை ஒருவன் கடலுக்கு அப்பால் உள்ள மேற்கு நாடுகளுடன் வியாபாரம் செய்யப் புறப்படுகிறான். வியாபாரம் என்றால், சேரநாட்டில் அள்ள அள்ளக்குறையாமல் விளைந்த மிளகைக் கொடுத்து, தங்கக் கட்டிகளை கப்பலில் நிரப்பி வருவது தான்.
வானியல் ஆய்வின் முன்னோடிகள்: தங்கம் மட்டுமா, யவனர்களின் தனித்தயாரிப்பான மதுவும், வாசனைத் திரவியங்களும் பரிசாக தமிழ்நாட்டை வந்தடைந்தன. திரைகடலோடியும் திரவியம் தேடும் ஆர்வம் வந்து விட்டது. ஆனால் ஆர்வம் மட்டும் போதாதல்லவா, கடலினுள் கப்பலை இயக்குவது அவ்வளவு எளிதா? அதற்கு கப்பல் மட்டுமல்ல, கடலையும் அறிந்திருக்க வேண்டும். கடலில் வீசும் காற்றையும், வழி காட்டும் விண் மீன்களையும் அறிந்திருக்க வேண்டும். இதனையெல்லாம் அறிந்து கொள்ளத்தான், தங்களின் வானியல் அறிவை மேம்படுத்தி பயன்படுத்திருக்கின்றனர் சங்ககாலத் தமிழர்கள். இன்றைய தேதியில் சிவகங்ககையை அடுத்த காளையர்கோயில் தான், அன்றைய தேதியில் இதற்கான அறிவியல் கூடமாக இருந்திருக்கக் கூடும்.
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இத்தகைய அறிவு பெற்றோரை தமிழ் அறிவர்கள் என குறிப்பிடுகின்றனர். வரிசையாக நடப்பட்ட கற்களையும், அவற்று நேரே தெரியும் நட்சத்திரங்களையும், சந்திர , சூரியனின் நிழலையும் வைத்து கால, நேரத்தை கணிக்கின்றனர் தமிழ் அறிவர்கள். இவர்களின் உத்தரவு கிடைத்ததும், உற்சாகம் பொங்க கிளம்பிச் செல்கின்றான் அந்த இளைஞன். இது கற்பனைக் கதை என்றாலும், இதற்கான சாத்தியக் கூறுகள் அனைத்தும் இருப்பதாகக் கூறுகின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
பல நூறு வருடங்களாக காளையார் கோவிலில் தொடர்ச்சியான வானியல் ஆய்வுகள் நடைபெற்றதாகவும், அப்பகுதியில் தற்போது மண்ணோடு மண்ணாக புதைந்து கிடக்கின்ற கல்வட்டங்கள் வானியல் நிகழ்வோடு தொடர்பு கொண்டுள்ளது என்கிற ஆச்சரியமூட்டும் தகவல்களை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் முன்வைக்கின்றனர். அறிவியல் வளர்ச்சி அதிகம் இல்லாத அந்தக் காலத்தில், மனித இனம் ஓரிடத்திலிருந்து புலம் பெயர்ந்து பிறிதோர் இடத்திற்கு வணிக நோக்கிலோ அல்லது வாழ்விட வசதிக்காகவோ பயணம் செய்ய முற்பட்டபோது, அவர்களுக்கு வானியல் அறிவு அவசியமாக இருந்தது. அந்த அடிப்படையில்தான் சூரிய, சந்திர நகர்வுகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.
அதன் தொடர்ச்சியாக நாட்காட்டி, பஞ்சாங்கம் என உருவாக்கத் தொடங்கினான். சுமார் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தென்னாப்பிரிக்காவிலுள்ள எலன்சேனி மலையில் அமைக்கப்பட்ட கல்வட்டம், 'ஆதாமின் நாட்காட்டி' என அழைக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக 11,500 ஆண்டுகள் முன்பு துருக்கியில் 'கொபெக்லி டெபே'(Göbekli Tepe), சுமார் 5,000 ஆண்டுகள் முன்பு இங்கிலாந்திலுள்ள ஆம்ஸ்பெரி என்ற ஊரில் அமைக்கப்பட்ட 'ஸ்டோன்ஹென்ச்' (Stonehenge- கணினியின் முகப்பு படத்தில் இதனை பார்த்திருக்கலாம்) ஆகியவை வானியல் கணிப்பு மையங்களாக இருந்துள்ளன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் ஒன்றியத்தில் புரசையடி உடைப்பு என்ற ஊரில் அமைந்துள்ள கல்வட்டம் வானியல் கணிப்பிற்காக சுமார் 3,500 ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வானியல் கணிப்பிற்கு உதவிய ஈமச்சின்னங்கள்: பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இறந்தவர்களின் உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றை வைத்து புதைப்பர். அப்படி, புதைக்கப்பட்ட இடத்தில் தரையின் மேற்பரப்பில் அடையாளத்திற்காகவும், அவர்களது நினைவாகவும் பெரிய கற்களை நாட்டிவைப்பார்கள். இந்த பெருங்கற்கால ஈமச்சின்னம் தான் கல்வட்டம் என்றழைக்கப்படுகிறது.
யார் இந்த தமிழ் அறிவர்கள்?: அப்படி, சிவகங்கையில் அமைந்துள்ள இந்த இடம் மேடான பகுதி என்பதால் இங்கு வானியல் கணிப்பையும் மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர்கள் தமிழ் அறிவர்கள் என்ற பெயரால் அறியப்பட்டிருக்கலாம் என்கிறார் தொன்மவியல் ஆய்வாளர் பொறியாளர் வெ.பாலமுரளி. இது குறித்து அவர் விவரிக்கையில், "இறந்த முன்னோர்களை அல்லது அவர்களது நினைவாக புதைக்கப்பட்ட இடங்களில் மிகப் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்படுவதுதான் பெருங்கற்கால நினைவுச் சின்னம்.
இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு விவசாயிகள், கடல்வழி வணிகர்களுக்குத் தேவையான தகவல்களைக் கூறியுள்ளனர். பல நூறு வருடங்களாக இப்பகுதியில் தொடர்ச்சியான வானியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்" என்கிறார். அப்பகுதியில் பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வரும் இலந்தகரை கிராமத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் ரமேஷ் கூறுகையில்,"சூரியனின் நகர்வு குறித்து இப்பகுதியில் இந்தக் கற்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளேன். வட செலவு, தென் செலவு எனும் சூரியனின் வடக்கு, தெற்கு நகர்வுகளைக் குறிப்பதற்கும் பருவகால மாற்றங்களை அறிவதற்கும் இங்கு வைக்கப்பட்டுள்ள குத்துக் கற்கள் அனைத்தும் மிகத் துல்லியமான வானவியல் ஆய்வுக்கு அடிப்படையாகும்.
பழங்கால வானியல் ஆய்வு மையம்: அதுமட்டுமன்றி, இந்த ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் அமர்ந்து கணிப்பதற்கான கல்லும் இங்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களைப் புதைப்பதற்கான கல்வட்டம் மட்டுமன்றி இதுபோன்ற நூற்றுக்கணக்கான கற்கள் இப்பகுதியில் வானியல் ஆய்வுக்காக அன்றைய மக்களால் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்" என்கிறார்.
சிவகங்கை தொல்நடைக்குழுவின் நிறுவனர் புலவர் காளிராசா கூறுகையில், "இந்த இடத்தின் சம காலத்தில் சிவகங்கை மாவட்டம் திருமலையில் கிடைக்கும் பாறை ஓவியங்களும் விண்மீன்களை சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள கற்களும் அதேபோன்று வானியல் நிகழ்வோடு தொடர்பு கொண்டுள்ளது.
ஆய்வு செய்ய ஆர்வம் காட்டும் ஆய்வாளர்கள்: எது செய்தாலும் நேரம், காலம் பார்க்கும் மரபு இப்போதும் உண்டு. அதுபோல தொழிலுக்குச் செல்லவும் இதே போன்ற மரபுகளைத் தமிழர்கள் நாம் பின்பற்றி வருகிறோம். அதுபோன்ற வணிகர்களுக்கு உதவுவதற்காக இந்த வானியல் ஆய்வுத்தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தற்போது தமிழக தொல்லில் துறை இவ்விடத்தில் ஆய்வு செய்துள்ளனர். விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்கினால் சிறப்பாக இருக்கும்" என்கிறார்.
தற்போது புதர் மண்டிக்கிடக்கும் இப்பெருங்கற்கால நினைவுச் சின்னத்தையும், வானியல் ஆய்வுத்தளத்தையும் மீட்டெடுப்பதுடன், உலகிலேயே சூரியன், சந்திரன் மற்றும் விண்மீன் நகர்வுகளை ஒரே இடத்தில் மேற்கொண்ட இடமும் இதுதான் என்ற பெருமையும் கிடைக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.இத்தனை ஆண்டுகளாக, கல்வட்டம் உள்ள பகுதியில் இறந்தவர்கள் பேய்களாக உலவுவதாகவும், இங்கு கிடக்கும் பொருட்களை எடுத்தால் தீய விளைவுகள் ஏற்படுவதாகவும் இவ்வூர் மக்களால் நம்மப்பட்டு வருவதால் கல்வட்டங்கள் மனிதர்களால் முற்றிலுமாக சேதமடையாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரை அருகே 500 ஆண்டுகள் பழமையான விஜயநகர கால நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு!