கரூர்: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கிருஷ்ணகுமார் (50). தீவிர முருக பக்தரான இவர், ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) குடும்பத்தினருடன் காரில் சென்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பினார். இன்று(ஜூலை 22) அதிகாலை 3:30 மணியளவில் கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலை அமைந்துள்ள அரவக்குறிச்சி அக்ஷயா ஓட்டல் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இடது புறத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கிருஷ்ணகுமார்(50) கிருஷ்ண குமாரின் மகள் வருணா(10) மாமியார் இந்திரா (67) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த கோரவிபத்தில் கிருஷ்ணகுமாரின் மனைவி மோகனா(40) மகன் சுதர்சன்(15) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று திரும்பிய போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வங்கதேச கலவரத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 49 பேர் மீட்பு- அமைச்சர் செஞ்சி மஸ்தான்!