வேலூர் : வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆண்டாள் நகரில் வசித்து வருபவர் அஸ்வத்தாமன். இவர் தனியார் கல்லூரியில் பிஎச்.டி படித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஆயுத பூஜை விடுமுறை வந்ததால் தனது சொந்த ஊரான மதுரைக்குச் சென்றுள்ளார்.
விடுமுறை முடிந்து கடந்த 13ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது இவரது லேப்டாப் தேடி உள்ளார். எங்கு தேடியும் லேப்டாப் கிடைக்கவில்லை. அப்போது தான் லேப்டாப் திருடப்படிருப்பதை உணர்ந்த அஸ்வத்தாமன் உடனடியாக இதுகுறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில், காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று( அக் 19) மாலையில் காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அறுப்புமேடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் லேப்டாப் இருந்ததைக் கண்ட போலீசார் உங்களுக்கு எப்படி லேப்டாப் வந்தது? எதற்காக பயன்படுத்துகிறீர்கள்? என கேட்டதற்கு, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் மூன்று பேரையும் காட்பாடி காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் கிறிஸ்டியன்பேட்டையைச் சேர்ந்த குமரன் (35), தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (40), அருப்புமேடு பகுதியைச் சேர்ந்த நவகுரு (45) ஆகிய மூன்று பேரும் காட்பாடியில் பல்வேறு பகுதிகளில் லேப்டாப்கள், கம்ப்யூட்டர் ஆகியவை திருடியது தெரிய வந்தது.
பின்னர் இவர்களிடமிருந்து 7 லேப்டாப்கள், 1 கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 331(4), 305 BNS ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்