சென்னை : இந்திய விமானப்படையின் 92வது நிறைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணியில் இருந்து பகல் ஒரு மணி வரை 2 மணி நேரம் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்தில் கடந்த அக் 1ம் தேதி முதல் வரும் 8 ஆம் தேதி வரை விமான சேவைகள் 15 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரையில் நிறுத்தப்பட்டன. இது குறித்து முன்னதாகவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதால், பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் பறப்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டது. இதையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 231 பயணிகளுடன், இன்று காலை 10.25 மணிக்கு, சென்னையில் தரையிறங்க வந்தது. அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதைப்போல் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் 188 பயணிகளுடன் இன்று காலை 10.35 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்தது. அந்த விமானமும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் டெல்லியில் இருந்து இன்று பகல் 12.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க 167 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் கோவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க : மெரினாவில் மெய்சிலிர்க்கும் விமான சாகசம்: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலை மோதிய மக்கள் கூட்டம்!
அதோடு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று பகல் 1.20 மணிக்கு பெங்களூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், 1.25 மணிக்கு கோவை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், அதைப்போல் இன்று பகல் 12.05 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகிய 3 விமானங்கள் சென்னை ஏர் ஷோ பாதுகாப்பு காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டன.
மேலும், கொல்கத்தா, கவுகாத்தி, அந்தமான், ஜெய்ப்பூர், மைசூர், கோவை, டெல்லி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 வருகை விமானங்கள், விசாகப்பட்டினம், அந்தமான், கொல்கத்தா, திருச்சி, டெல்லி, அகமதாபாத், கோவா உள்ளிட்ட 9 புறப்பாடு விமானங்கள் மொத்தம் 19 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்