கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த பாகலுார் அருகே உள்ள பட்டவாரப்பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் (50) என்பவரின் மகள் ஸ்பூர்த்தி (16). இவர் பாகலுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +1 படித்து வந்துள்ளார். கடந்த 14ஆம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற ஸ்பூர்த்தி வீடு திரும்பாததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 16) இரவு தலையில் காயங்களுடன் பட்டவாரப்பள்ளி ஏரியில் அவர் சடலமாக மிதந்துள்ளார். இதையடுத்து, மாணவியின் உடலை மீட்ட பாகலூர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ் விசாரணை: அந்த விசாரணையில், மாணவி ஸ்பூர்த்தி முத்தாலியைச் சேர்ந்த வாலிபர் சிவா (25) என்பவரைக் காதலித்து வந்ததும், இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாத நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மாணவியை சிவா அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர், சிவா மீது ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் கண்டிப்பையும் மீறி, தொடர்ந்து மாணவி ஸ்பூர்த்தி, சிறையில் இருந்து வெளியே வந்த சிவாவுடன் காதலைத் தொடர்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
நடந்தது என்ன?: இந்த நிலையில், பாகலூர் போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்துள்ளனர். அதில் மாணவியின் வீட்டின் அருகே இருந்த கேமரா காட்சிகளைப் பார்த்தபோது, மாணவி மாயமான சமயத்தில், மர்ம நபர் ஒருவர் சிசிடிவி கேமராவை துணி போட்டு மூடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மாணவியை யாரோ அடித்துக் கொன்று, சடலத்தை ஏரியில் போட்டது போலீசார் விசாரணையில் உறுதியானது. இது சம்பந்தமாக மாணவியின் தந்தை பிரகாஷ் (50), தாய் காமாட்சி (35) ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், காதலன் சிவா மீதான காதலைக் கைவிடுமாறு மாணவியிடம் தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், மறுத்த மகளை இரும்பு கம்பியால் தலையில் அடித்து பெற்றோர் கொலை செய்தது தெரிய வந்ததுள்ளது. பின்னர், சடலத்தை 3 கி.மீ தொலைவில் உள்ள ஏரியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வீசி விட்டு வந்ததும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து, இந்த விசாரணையின் அடிப்படையில் மாணவியின் அப்பா பிரகாஷ், அம்மா காமாட்சி மற்றும் மாணவியின் பெரியம்மா மீனாட்சி ஆகிய மூன்று பேரையும் பாகலூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், காதலைக் கைவிடாத மாணவியை பெற்றோரே அடித்து கொலை செய்து, உடலை ஏரியில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோவையில் உரிய ஆவணமின்றி ரூ.42.26 லட்சம் ஒரே நாளில் சிக்கியது!