தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் தனியார் பள்ளியில் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களுக்கு வாக்களிக்க ஏதுவாக இருக்கின்றதா என தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி வாக்களிக்கும் இடத்தினை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதேபோல், பாண்டிசேரியிலும் வெற்றி என்பது நிச்சயம். மக்களுக்கு வாக்குப்பதிவு செய்யக்கூடிய இயந்திரத்தின் மீது சந்தேகம் உள்ளது.
ஜனநாயகம் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு, மக்கள் நம்பிக்கையோடு வாக்களிக்க கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அதனால் இந்த சந்தேகங்களை தீர்ப்பதற்கு வழி காண வேண்டும். இல்லையென்றால், பழையபடி வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். மக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்கக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.
வாக்குச் சீட்டு முறையை தான் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறவில்லை. டெக்னாலஜிக்கு எதிராகவும் பேசவில்லை. எந்த தவறும் நடக்காதபடி, மக்கள் சந்தேகமின்றி ஓட்டு போட வேண்டும். மேலும், மக்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சர்கார் பட பாணியில் வாக்களிக்கிறாரா விஜய்? விமான நிலையம் டூ வாக்குச்சாவடி! - Lok Sabha Election 2024