தூத்துக்குடி: ஆர்இசி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று (ஆக.3) தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஆர்இசி லிமிடெட் இயக்குனர் திருப்பதி நாராயணன், அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் லட்சுமிபதி, மேயர் ஜெகன்பெரியசாமி, எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தனர்.
பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழியிடம், மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்தீர்கள், அதன் பின்பும் மத்திய அரசு நிதி ஒதுக்கியதா என்ற கேள்விக்கு, “நாடாளுமன்றத்தில் அது குறித்து பேசுகின்றேன். மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது கூட ஏழு நாட்களுக்கு முன்னால் தெரிவித்தோம் என்று சொன்னார்கள். ஆனால், உண்மை அது அல்ல என முதலமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கின்றார். அதே நிலைதான் தற்போது கேரளாவிலும் நிகழ்ந்துள்ளது. ஏழு நாட்களுக்கு முன்பே நாங்கள் தகவல் தெரிவித்து இருந்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களுக்கு உதவியும் செய்யவில்லை. ஆனால், முன்னெச்சரிக்கை செய்துவிட்டோம். அவர்கள் தயாராகவில்லை என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் வழக்கமான நடைமுறையாக அவர்கள் செய்து கொண்டிருக்கக் கூடிய ஒன்று.
மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிதியை அரசியல் காரணங்களுக்காக எவ்வளவு நாள் இழுத்து அடிக்க வேண்டுமோ அவ்வளவு நாள் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட போது தூத்துக்குடி மக்களுக்கு நிதியை பலமுறை நாடாளுமன்றத்தில் கேட்டோம்.
முதலமைச்சரும் கோரிக்கையாக பல கடிதங்கள் எழுதி இருக்கின்றார். நானும் துறை சார்ந்த அமைச்சர்களைச் சந்தித்து கேட்டிருக்கின்றேன். இதற்குப் பின்பும் அந்த நிதியை நிறுத்தி வைத்து இருப்பது யார் என்று அவங்களுக்கு தெரியும். நிறுத்தி வைத்தவர்கள் விடுவித்தால் பணம் வரும்.
வயநாடு மழை வெள்ள பாதிப்பு தேசியப் பேரிடராக அறிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு, அவர்கள் எதையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. காரணம், அவர்களே தேசிய பேரிடராக தான் இருக்கின்றார்கள்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “அமைச்சர் சிவசங்கரன் கடவுள் ராமரைப் பற்றி மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கின்றார். ராமர் பிறந்த இடத்தில் மத்திய அரசு ராமருக்கு கோயில் கட்டி இருக்கின்றது.
கடந்த வாரம் தமிழக சட்ட அமைச்சர் சொன்னார், ராமர் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அமைச்சர்கள் மாறி மாறி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் சிவசங்கரன் ராமர் ஆட்சி மாய ஆட்சி என்று சொல்லி இருக்கின்றார்.
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் எல்லாரையும் கொண்டு வந்து கல்வெட்டு வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ராஜேந்திர சோழன் உட்பட சோழ சாம்ராஜ்யமே பகுத்தறிவால் உருவானது அல்ல, பகுத்தறிவால் வாழ்ந்தது அல்ல, சோழ சாம்ராஜ்யம் என்பது முழுக்க முழுக்க இந்து கடவுள்கள் இந்து கோயில்களை எழுப்பிய ஓர் பேரரசு. அது கூட தெரியாமல் பேசிக் கொண்டு வருகிறார்.
தொடர்ந்து ராமபிரானை இழிவுபடுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்று பேசினார். அமைச்சராக இருக்கக்கூடியவர்கள் உறுதியான நிர்வாகத்தை கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தினந்தோறும் கூலிப்படையினரால் மக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர் கதையாகி உள்ளது. அதை கவனிக்க அரசு நிர்வாகம் சரியான முறையில் செயல்படவில்லை.
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறவிட்ட இந்த அரசு, இனி இருந்து பிரயோஜனம் இல்லை. அதனால் இந்த அரசு தார்மீக கடமையை, உரிமையை இழந்துவிட்டது. தூத்துக்குடியைப் பொறுத்தளவில் மத்திய அரசாங்கம் துறைமுகம், சாலை வசதி, விமான நிலையம் போன்ற எத்தனையோ பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்தும் கூட, இங்க இருக்கக்கூடிய திராவிடமாடல், தமிழக அரசு தொழில் ரீதியான முன்னேற்றங்களை, முதலீடுகளை கொண்டு வருவதற்கு தயாரில்லை.
வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்யப் போகிறார்கள் என்று சொல்லியும் கூட எந்த முதலீடும் வரவில்லை என்பது மிக முக்கியமான ஒரு கருத்து. ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால், நீங்களாகவே அதை விட்டு கீழே இறங்கி வருவது உத்தமம்.
தேசிய பேரிடர் காலத்தில் கூட அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு நிகராக வயநாடு சம்பவம் உறுதியாக ஒரு பேரிடராக ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக மத்திய அரசாங்கம் தேசிய நிவாரணப் படகுகளை அனுப்பி இருக்கிறது. ராணுவம் விரைந்து இருக்கின்றது.
உரிய அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதி அளித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் அறிவித்தால் என்ன ஏது என்பதை முதலில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சில விதிகள் சட்டங்கள் எல்லாம் இருக்கின்றது" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு; ஏன் மத்திய கமாண்டோ படைகளை அனுப்பவில்லை? - செல்வப்பெருந்தகை கேள்வி! - selvaperunthagai criticise amitshah