மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் மடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் மடாதிபதியாக 24 - வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிய பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். ஆதினத்தின் மடாதிபதி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் திமுக கட்சியினருக்கு அருள் வாழ்த்துரை வழங்கி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த செய்திக் குறிப்பில், "பாரதத் திருநாட்டின் பிரதமராக மூன்றாவது முறை தாங்கள் பதவியேற்பது உலக அளவில் அனைவரும் வியந்து போற்றும் அருஞ்சாதனை. தங்களின் நல்லாட்சிக்கும் தியான வழிபாடுகளுக்கும் இறைவன் தந்த பரிசாக இந்த வெற்றியைப் பார்ப்பதாகத் தெரிவித்தார். இந்த ஆட்சிக் காலத்திலும் தங்களின் மேலான நிர்வாகத் திறனால் நம் நாட்டின் தொழில் வளம், பொருளாதார வளம், ஆன்மீக வளம் யாவும் சிறந்து தழைக்க வேண்டுமென நமது ஆன்மார்த்த மூர்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம் என்று பாஜகவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அருள் வாழ்த்துரை வழங்கினார்.
இதைப்போல நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றிருப்பது யாவரும் போற்றும் சிறந்த சாதனை எனவும், பாமர மக்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் எனப் பலதரப்பினரும் பயன்பெறும் முறையில் தாங்கள் வகுத்துச் செயல்படுத்தும் சீரிய திட்டங்களுக்கான சிறந்த பலனாக இந்தப் பெருவெற்றித் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
தங்களின் நல்லாட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்மொழியும் மேன்மேலும் வளம் பெற்றுச் சிறக்க வேண்டுமென நமது ஆன்மார்த்த மூர்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் வாழ்த்துரை வழங்கினார்".
இதையும் படிங்க: மதுரை ஆதீனம் நியமனம் தொடர்பான வழக்கு; நித்யானந்தாவின் சீராய்வு வழக்கு ஒத்திவைப்பு!