திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கீழ வைப்பூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (46). இவருக்கும் வைஷ்ணவி என்பவருக்கும் கடந்த 2009ல் திருமணமான நிலையில் ஒரு ஆண் குழந்தையும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். செல்வகுமார் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2015ல் செல்வகுமார் - வைஷ்ணவி தம்பதிகளுக்கு நான்காவது பெண் குழந்தை பிறந்து 16 நாட்கள் ஆன நிலையில், வைப்பூரில் உள்ள தகரக் கொட்டகைக்கு பழுது நீக்கும் வேலைக்காக செல்வகுமார் சென்றுள்ளார். அப்போது கொட்டகைக்கு உள்ளே இருந்த செல்வக்குமார் மீது தகரக் கொட்டகை சரிந்து முதுகில் விழுந்ததுள்ளது.
இதில் காயமடைந்த அவரை மீட்டு முதலில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தன்னிடம் உள்ள நகைகளை அடகு வைத்து, சுமார் 1 லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்காக செலவு செய்துள்ளார் வைஷ்ணவி.
அங்கு செல்வகுமாருக்கு படுக்கைப் புண் ஏற்பட்டதால் தொடையிலிருந்து சதையை எடுத்து வைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் இடுப்பிற்கு கீழ் எந்த உணர்வும் இன்றி நடக்க முடியாமல் கடந்த எட்டு வருடங்களாக படுத்த படுக்கையாக வீட்டிலேயே முடங்கி உள்ளார்.
இதனால் அவரது குடும்பத்தில் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில், செல்வகுமாரின் மனைவி கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
முதுகு தண்டு வட பாதிப்பால் முடங்கிய குடும்பம்: தற்போது செல்வகுமார் - வைஷ்ணவி தம்பதியினரின் மூத்த மகன் பத்தாம் வகுப்பும், மகள்கள் எட்டாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, நான்காம் வகுப்பு பயின்று வரும் நிலையில் கணவனையும் கவனித்துக் கொண்டு பிள்ளைகளுக்காக வயல் வேலைக்குச் சென்று குடும்பத்தை தன் தோளில் தூக்கி சுமந்து வருகிறார் வைஷ்ணவி.
அரசு மூலம் மாதம் 3000 ரூபாய் பணம் செல்வகுமாருக்கு வரும்போதிலும் கூட அதனை வைத்து மருத்துவச் செலவை கூட கவனிக்க முடியாத சூழல் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். குறிப்பாக வைஷ்ணவிக்கு வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே வயல் சார்ந்த கூலி வேலை இருக்குமாம் அதுவும் அவர் கணவனைக் கவனிக்க வேண்டிய காரணத்தினால் உள்ளூரிலேயே வேலை செய்வதால் மீதமுள்ள நாட்களில் சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலை இருப்பதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார்.
பாதி நிலையில் வீடு: மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து கணவரின் மருத்துவ செலவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் காரணமாக அந்த வீட்டை முழுமையாக அவரால் கட்ட முடியாத சூழல் நிலவி வருகிறது. தற்போது அந்த வீட்டில் கதவு, ஜன்னல் கூட இல்லாமலும் வீட்டில் தரைப் பகுதி, சுற்றுபுறச் சுவர்கள் பூச்சு பூசப்படாமலும் இருக்கின்ற நிலையில் 4 குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.
தமிழக அரசுக்கு கோரிக்கை: ரேஷன் கடையில் வாங்கும் 35 கிலோ அரிசியை வைத்து தான் பிள்ளைகளுக்கு உணவாகச் செய்து கொடுப்பதாகும், சில நேரங்களில் அது கூட தீர்ந்து போய் விடுவதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவிக்கும் வைஷ்ணவி. தன் 12வது வரை படித்து இருப்பதாகவும் அதற்கு தகுந்தாற்போல் ஏதேனும் வேலை ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்து உள்ளார். மேலும் கணவருக்கு கொடுக்கின்ற உதவித் தொகையையோ அரசு உயர்த்தி வழங்கினால் பிறரைப் போல தானும் கௌரவமாக வாழ முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவில் பாட்டி - பேத்தியைக் காப்பாற்றிய யானை.. 2டி சிற்பத்தில் தத்ரூபமாய் வடிவமைத்த மாணவி!