திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் கூவம் கரையை ஒட்டிய மேடான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில், வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாகவும் கூறி, இங்குள்ள குடியிருப்புகளை அதிகாரிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவேற்காடு கூவம் நதி ஓரம் அமைந்திருக்கும் குடியிருப்புகளை விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவேற்காடு நகராட்சி பெருமாள் கோயில் தெரு பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்கள், பீதியிலே உறைந்து நிம்மதியற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
2005ல் இருந்து தொடர்ச்சியாக இப்பகுதியினை அதிகாரிகள் அகற்றப் போகிறார்கள் என்ற செய்தி பரவுவதும் அதனால் மக்கள் பீதி அடைவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. கூவம் ஆற்றின் கரைப்பகுதியில் ஏறத்தாழ 30 அடி உயரத்தில் தான் இந்த குடியிருப்புகள் உள்ளன.
ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் 20 - 30 வீடுகள் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டுள்ளன. அந்த வீடுகளை இடுப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் 30 அடி உயரத்தில் உள்ள 300 வீடுகளை இடிக்க அதிகாரிகள் முயற்சிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இது தொடர்பாக ஏற்கனவே இருந்த ஆட்சியர் வர்கீஸ் ஆய்வு செய்து தாழ்வான பகுதியில் இருக்கும் வீடுகளை மட்டும் இடிப்பதற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால் அவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டு விட்டார். அவருக்குப் பின் வந்துள்ள மாவட்ட ஆட்சியர் அனைத்து வீடுகளையும் பிடித்து அப்புறப்படுத்த உள்ளதாக தெரிகிறது.
இந்த மக்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். வெள்ளத்தால் இவர்கள் பாதிக்கப்படவில்லை. நீரோட்டமும் இவர்களால் தடுக்கப்படவில்லை. இருந்தாலும் நீதிமன்ற உத்தரவு இருக்கிறது என்ற காரணத்திற்காக அனைத்து வீடுகளையும் பொதுவாக இடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அரசு கைவிட வேண்டும்.
ஆற்றின் குறுக்கே மறித்து கார்ப்பரேட் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் கல்வி நிறுவனங்கள் கூட கட்டப்பட்டுள்ளன. அவர்களை எல்லாம் சீண்டி பார்க்காத இந்த அரசாங்கம் இங்கு இருக்கும் ஏழை எளிய மக்களை அச்சுறுத்துவது ஏற்புடையது அல்ல. மாவட்ட ஆட்சி நிர்வாகம் இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும் முதலமைச்சர் கவனத்திற்கு இந்த பிரச்சனையை எடுத்து செல்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராட்வைலர் நாய்களிடம் உயிரைப் பணயம் வைத்த தாய்! குழந்தையை காப்பாற்ற நடந்த போராட்டம்!