சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று வழங்கினார்.
இதன் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அண்மையில் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை நாம் அறிவோம்.
இந்த நிலையில் தமிழக அரசு, மத்திய அரசிடம் கேட்ட நிதியை வழங்காமல், ரூ.944.80 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டு மத்திய அரசு வழக்கம்போல தமிழக மக்களை கைவிட்டுள்ளது. ஆகவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், எங்களது 4 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தையும் மற்றும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரண்டு மாத சம்பளத்தையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமீப காலமாக பல்வேறு நிகழ்வுகளிலும், சமூகம் ஊடகங்களிலும் தனது கருத்துகளை வெளியிட்டதன் மூலம் கட்சியின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக அவரிடம் பலமுறை அறிவுரை செய்தோம். ஆனாலும், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு என் மீதான நம்பகத்தன்மைக்கு எதிராக அமைந்திருந்த சூழலினால், கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி ஆறு மாத காலத்திற்கு அவரை கட்சி பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாது எனக் கூறியது சுதந்திரமான ஒரு முடிவு. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் எங்களுக்கும் எந்த விதமான பிரச்சனையும் கிடையாது.
இதையும் படிங்க: விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.. வெளியான அதிரடி அறிக்கை!
ஆனால், அவருடன் ஒரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பங்கேற்பது என்பது, எங்கள் கட்சியின் வளர்ச்சியை பிடிக்காதவர், எங்களை வீழ்த்த வேண்டும் என நினைத்து இருப்பவர்கள், இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எங்களுக்கு எதிராக கதை கட்டுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை முன்னுணர்ந்து, எங்களது நலனை கருதி கொண்டு நாங்கள் எடுத்த முடிவு. இதனை விகடன் பதிப்பகத்தாருக்கு தொடக்க நிலையிலேயே சுட்டிக்காட்டி, நீங்கள் விஜயை வைத்தே புத்தகத்தை வெளியிடலாம் என கூறிவிட்டோம்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.
"பாஜக யார் கட்டுப்பாட்டில் உள்ளது?": இதனை தொடர்ந்து, விசிக திருமாவளவன் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ஆதவ் அர்ஜுனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என அண்ணாமலை விமர்சித்திருந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பாரதிய ஜனதா கட்சி அதானி கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது மோடி கட்டுப்பாட்டில் உள்ளதா? என முதலில் அண்ணாமலை கூறட்டும். அதன் பின்பு நான் விடுதலை சிறுத்தைகள் கட்சி யார் கட்டுப்பாட்டில் உள்ளது என கூறுகிறேன்" என்று திருமாவளவன் பதிலளித்தார்.