சென்னை: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, தேவேந்திரகுல மக்கள் பேரவை தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பத்ரி மற்றும் மாஞ்சோலை தொழிலாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்னை குறித்து பேசிய திருமாவளவன், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும். ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் தற்போது முடிவடையும் நிலையில், தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது அநாகரிகமான செயலாகும். தொழிலாளர்களை வெறும் கையோடு விரட்டி அடிப்பது மாபெரும் அநீதி.
எனவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். ஒப்பந்த நிறுவனத்திடம் அழுத்தம் கொடுத்து நஷ் டஈடு வாங்கித் தர வேண்டும். மேலும், அவர்களுக்கு அரை ஏக்கர் நிலம் பெற்றுத் தந்து அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் பேசினார்" என்று கூறினார்.
இதேபோல திருமுருகன் காந்தி பேசியபோது, "ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தேயிலைத் தோட்டத்தில் மாஞ்சோலை மக்கள் நான்கு தலைமுறையாக அங்கு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அரை அடிமை முறை என்ற கொடுமையான முறையில் அங்கு வேலை செய்துள்ளனர்.
அங்கு வாழும் மக்கள் காலம் காலமாக தொழிலாளர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு எந்தவொரு படிப்பறிவையும் ஏற்படுத்தாமல், அவர்களுக்கான முன்னேற்றம் ஏதுவுமின்றி அந்த நிறுவனம் இருந்துள்ளது. 1928-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் வரும் 2028ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது.
ஆனால், Bombay Burma Trading Corporation நிறுவனம் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை 4 ஆண்டுகளுக்கு முன்பே விருப்ப ஓய்வு கொடுத்து வெளியேற்றியுள்ளது. அதுபோக, அவர்களுக்கான நஷ்ட ஈடாக ரூ.2 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளது. இது சாதாரண ஏழை மக்களை ஏமாற்றக்கூடிய செயலாகும். மாஞ்சோலையில் கிட்டத்தட்ட 600 குடும்பங்கள், 5 கிராமங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்ட வேலையை தான் செய்கிறார்கள்.
ஆனால், தற்போது திடீரென்று அவர்களை வெளியேற்றும் போது அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கள் கோரிக்கை என்னவெனில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு முறையான நஷ்ட ஈட்டைப் பெற்றுத்தர வேண்டும் மற்றும் அந்த தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். இந்த மக்களுக்கு சமவெளியில் அரை ஏக்கர் அளவு நிலம் கொடுக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக வரும் ஜூலை 21ஆம் தேதி மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமை மாநாடு திருநெல்வேலியில் நடைபெற உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நூதன போராட்டம்.. நெல்லையில் நடந்தது என்ன?