"வாக்கு இயந்திரத்தை நம்பியே பாஜக 370 தொகுதியில் வெற்றி பெறும் என கூறுகிறார்கள்" - துரை வைகோ! - Voting Machine
MDMK Durai Vaiko: வாக்கு இயந்திரத்தை நம்பியே 370க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
!["வாக்கு இயந்திரத்தை நம்பியே பாஜக 370 தொகுதியில் வெற்றி பெறும் என கூறுகிறார்கள்" - துரை வைகோ! Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/20-02-2024/1200-675-20796630-thumbnail-16x9-duraivaiko.jpg?imwidth=3840)
![ETV Bharat Tamil Nadu Team author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Feb 20, 2024, 5:59 PM IST
திருநெல்வேலி: நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில், நெல்லை மண்டல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் நிதி மற்றும் வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் இன்று (பிப்.20) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதோடு கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதியாகச் சுமார் 2.5 கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் காசோலைகளை மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவிடம் வழங்கினர். அதிகபட்சமாக நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் கே எம் ஏ நிஜாம் முதல் கட்ட நிதியாக 35 லட்சத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "சமூக நீதி சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் தமிழகத்தின் சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசால் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை மதிமுக வரவேற்கிறது.
மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி மத்திய அரசின் குறுக்கீடு உள்ளிட்டவற்றைக் கடந்து தமிழக பட்ஜெட் சிறப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கிப் பல திட்டங்களைச் செயல்படுத்தும் நிலை உள்ளது. மழை வெள்ளத்தால் தமிழகத்திற்கு 37,000 கோடி ரூபாய் வரை நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல், தமிழக மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சவாலான நேரத்தில் தமிழக அரசு சிறப்பான பட்ஜெட்டை அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் தவிர அனைவரும் பாராட்டி வருகின்றனர். மழை வெள்ளப் பாதிப்பு, ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு நிலுவைத் தொகை வராதது போன்றவற்றின் காரணமாகவே தமிழகத்தின் வருவாய் குறைந்துள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். விருதுநகர் திருச்சி ஈரோடு உள்ளிட்ட மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மதிமுக போட்டியிட வேண்டும் எனத் தொண்டர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்பது மதிமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவைப் பொருத்து வேட்பாளர்கள் அறிவிப்பு இருக்கும்.
மதிமுக பம்பரம் சின்னத்தை இழந்துவிட்டது. குறுகிய காலத்தில் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிட்டு மக்களைச் சந்திக்க முடியாத நிலை இருந்ததால் மாற்றுச் சின்னத்தில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டோம். தற்போது தனிச் சின்னத்தில் போட்டியிடுவதே எங்களது விருப்பம். இது குறித்து கூட்டணியும் கட்சித் தலைமையும் முடிவு செய்யும்.
இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் மட்டுமே வெளியேறியுள்ளது. வலுவான நிலையிலேயே கூட்டணி உள்ளது. தொகுதிப் பங்கீடு விரைவில் முடித்து இந்தியா கூட்டணி வெற்றி பெறும் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். வாக்கு இயந்திரத்தை நம்பியே 370க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்புகள்!