தேனி: பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் மற்றும் வன்முறைகளை தடுத்து மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை கடந்த ஆகஸ்ட் மாதம் 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவானது தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்ட பின்பு அறிக்கை தயார் செய்து நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. அதில் முக்கியமானதாக அரசுப் பள்ளிகளில் ஆதி திராவிடர் பள்ளி, கள்ளர் பள்ளி என உள்ள சாதிப் பெயர்களை அகற்ற வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களின் கையில் வண்ண கயிறுகள் கட்டுவதால் சாதி மோதல்கள் உருவாக கூடும் என்றும், பள்ளிகளில் கயிறு கட்டுவதை தடை செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு பரிந்துரைகள் அறிக்கையாக நேற்று (ஜுன் 18) சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் வழக்கமாக நடைபெறும் ஊராட்சி மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற குழு தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அறிக்கை கிழிப்பு: பின்னர் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு சமர்ப்பித்த அறிக்கை குறித்து பேசிய ஊராட்சி மன்ற குழு துணை தலைவர் ராஜபாண்டி, மூன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் புத்தகத்தின் முகப்பு பக்கத்தில் மத அடையாளத்தை வெளிப்படுத்தி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறது தமிழக அரசு என்றும், சந்துரு குழு சமர்ப்பித்த அறிக்கை குப்பை தொட்டிக்கு தான் செல்ல வேண்டும் என்றும் கூறி அறிக்கையின் நகலை கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு சார்பில் நடைபெறும் கூட்டத்தில் துணைத் தலைவரின் செயலுக்கு அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஊராட்சி குழு துணை தலைவர் ராஜபாண்டி, “ஆதிதிராவிடர் நல பள்ளி, கள்ளர் பள்ளி, பழங்குடியினர் பள்ளி உள்ளிட்டவற்றை பள்ளிக்கல்வி துறையின்கீழ் இணைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதுபோன்ற பரிந்துரைகள் அடித்தட்டு மக்களுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்ற மக்களின் எண்ணங்களை எனது எதிர்ப்பு மூலமாக இன்றைய கூட்டத்தில் தெரியப்படுத்தியுள்ளேன். பள்ளிகளில் எந்தவித மத அடையாளங்கள் பின்பற்றக்கூடாது என கூறி இருக்கலாம். ஆனால் கையில் கயிறு கட்டக் கூடாது என இந்து மதத்தை மட்டும் ஆய்வறிக்கையில் கூறியிருக்கிறார்.
சிறுபான்மையினர் நடத்தும் பள்ளியில் நடைபெறும் அத்துமீறல்களை ஆய்வறிக்கையில் கூறாமல் அரசு பள்ளியில் மட்டும் ஆய்வு செய்துள்ளார்கள். பள்ளி மாணவர்களின் மூன்றாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள முகப்பு பக்கத்தில் மத அடையாளங்களை வெளிப்படுத்தி படங்கள் இருப்பதால், மதமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் உள்ளது. சந்துருவின் அறிக்கை அதிகாரிகளின் மத்தியில் சாதிய வன்மத்தை அதிகரிக்கும் அபாயகரமான ஆய்வறிக்கை என இன்றைய கூட்டத்தில் அவரது ஆய்வறிக்கையை புறந்தள்ளி இருக்கிறோம்” என ராஜபாண்டி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 5,845 ஆசிரியர்கள் அரசு பள்ளிக்கு மாற்றம் - tamil nadu school teachers transfer