தேனி: தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மனாக மிதுன் சக்கரவர்த்தி இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனிசெட்டிபட்டி பகுதியில் புதிதாக ஒரு துணிக்கடை திறக்கப்பட்டது. அந்த துணிக்கடையின் வாசலில் ஆட்டோ நிறுத்துவது குறித்து இருதரப்பிற்கிடையே பிரச்னை எழுந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஒரு தரப்பு இப்பகுதியில் ஆட்டோவை இயக்கக் கூடாது என மற்றொரு தரப்பு கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியிடம் சென்ற நிலையில், இது குறித்து அவர் ஆட்டோ ஓட்டுநர் முருகவேல் என்பவரிடம் பேசிய அலைபேசி ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த ஆடியோவில் பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி முருகவேலிடம், “அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆட்டோக்கள் ஓட்டக்கூடாது. மேலும், நான் சொல்லும் போதுதான் ஆட்டோக்களை ஓட்ட வேண்டும். இல்லையென்றால் ஆட்டோக்களின் பெர்மிட்டை ரத்து செய்து விடுவேன். மேலும், ஆட்டோக்கள் மீது வழக்கு போட்டு பெர்மிட் ரத்து செய்து விடுவேன்.
இதையும் படிங்க: 'சரக்கு அடிக்கலாம் வரியா'? கல்லூரி மாணவியை போனில் அழைத்த பேராசிரியர் கைது.. நெல்லையில் பரபரப்பு!
இதை மீறினால் 200 கஞ்சா குடிப்பவர்களை வைத்து உங்களை குத்திக் கொலை செய்து விடுவேன். என் ஊரில் வந்து யாரும் ரவுடித்தனம் பண்ணக்கூடாது. எவன் எதிர்த்து பேசினாலும் அவனை பிடித்து கட்டி வைத்து அடித்து விடுவேன். யாராவது மீறி ஆட்டோ ஓட்டினால் பெர்மிட் ரத்துதான்” என பேசிய ஆடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.