தேனி: கடந்த ஜூலை 30ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பட்ட நிலையில், சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் இதில் ஏராளமான மக்கள் தங்களது சொத்துக்களை இழந்தும், சொந்தங்களை இழந்தும் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணங்கள் அளித்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் சிஐடியூ ஆட்டோ தொழிலாளர்கள், இன்று (ஆகஸ்ட் 7) வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக அவர்களது ஒரு நாள் ஆட்டோ சவாரி பணத்தை நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்வின் துவக்க விழா வ.உ.சி திடலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அறிவிப்பின்படி இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒருநாள் ஆட்டோ சவாரியில் நிவாரண நிதி திரட்ட சென்றனர்.
மேலும் இந்த ஆட்டோக்களில் சவாரி செய்யும் பொதுமக்கள் தங்களது சவாரிக்கான பணத்தினை வயநாடு நிவாரண நிதிக்கு அனுப்பும் வண்ணமாக ஆட்டோக்களில், நிதி செலுத்த குடம் ஒன்று வைத்துள்ளனர். இதில் சேகரிக்கப்படும் தொகையானது இன்று இரவு ஒன்று சேர்க்கப்பட்டு நிலச்சரிவு நிவாரண நிதிகாக அனுப்பப்பட உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: சேர்த்து வச்ச பணத்தை நிவாரண நிதியாக கொடுத்த பிள்ளைகள்!