தேனி: தேனியில் தனியார் நிறுவனம் மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து மாணவர்கள் போதைப்பொருளிலிருந்து விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாரத்தான் போட்டிகள் இன்று(பிப்.3) காலை தேனி பங்களா மேடு பகுதியிலிருந்து தொடங்கி நடைபெற்றது.
போட்டிக்கு நுழைவுக் கட்டணமாக 300 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த போட்டியில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஆண், பெண் சிறுவர்கள் எனப் பல பிரிவுகளாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், 250 பேருக்கு சைக்கிள்களும் பரிசாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இளைஞர்களுக்கு முறையான டோக்கன் வழங்கப்படாததால் பதிவு செய்யாமல் ஏராளமான இளைஞர்கள் போட்டியில் பங்கேற்றதாகவும், போட்டியாளர்களுக்கு வேண்டிய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக ஏதும் ஏற்படுத்தி தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் ஓட்டப்பந்தயத்தில் மயக்கமடைந்த சிறுவர், சிறுமிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட முறையாக ஏற்படுத்தவில்லை என்றும், தனியார் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறி இளைஞர்கள் தேனி - மதுரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடை செய்யப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரமாக, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் தேனி மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முறையாக அடிப்படை வசதி செய்து தராமல், போட்டி நடத்திய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் எனக் கூறி இளைஞர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவனம் மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து நடத்தும் மாரத்தான் போட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் குளறுபடி ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: எந்த நேரத்திலும் எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் - அண்ணாமலை