திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வெள்ளான்குளியில் சாலை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (42)என்பவர் பணி செய்து வந்துள்ளார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் அரிவாளால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் அரசு பேருந்து கண்ணாடியைச் சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த கருப்பசாமியைச் சரமாரியாக வெட்டியுள்ளனர், இதில் படுகாயமடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அங்கு இருந்த மற்றொரு நபரையும் வெட்டி காயப்படுத்திவிட்டு தாமிரபரணி ஆற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆற்றின் கரையோர பகுதியில் சென்று இருவரையும் பிடிக்க முயற்சித்துள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் செந்தில் என்ற போலீசாரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் பெரும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தென்திருப்புவனத்தை சேர்ந்த பேச்சிதுரை, மற்றும் கல்லிடைகுறிச்சியை சேர்ந்த சந்துரு ஆகிய இருவரும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இருவரும் திருப்புடைமருதூர் அருகே தோட்டத்திற்குள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் பேச்சி துரை என்பவரைத் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். ஆனால் கல்லிடைகுறிச்சியை சேர்ந்த சந்துரு என்பவர் தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே ரவுடிகள் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த போலீஸ்காரர் செந்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரில் சென்று நலம் விசாரித்தார். அதே போல் தென்திருப்புவனத்தை சேர்ந்த பேச்சிதுரை தற்பொழுது சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தப்பியேடிய மற்றொரு நபரான சந்துருவையும் போலீசார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. போதை ஆசாரிகள் இருவர் கையில் அரிவாளுடன் சர்வ சாதாரணமாக ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அரசு பேருந்து சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டதுடன் அவர்களைப் பிடிக்கச் சென்ற போலீசாரை அறிவாளால் வெட்டிய சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - பல்வேறு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!