சென்னை: சென்னையில் இயங்கி வரும் பார்கள் மற்றும் ரூஃப் டாப் பார்களில் பெரும்பாலானவை விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ்வர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், பல ரெஸ்டோ பார்களில் தடை செய்யப்பட்ட குட்கா குறித்து விளம்பரம் செய்யப்படுவதாகவும், ரூஃப்டாப் பார்களை முறைப்படுத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: போக்குவரத்து துறை வேலை மோசடி வழக்கு; அமைச்சர் செந்தில் பாலாஜி கோர்ட்டில் ஆஜர்!
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எந்த பார் முறைகேடாக செயல்படுகிறது என்பது குறித்து குறிப்பிட்டு சொல்லாமல், பொத்தாம் பொதுவாக உரிய அனுமதியுடன் செயல்படும் பார்களையும் சேர்த்து முறைபடுத்த வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்