சென்னை: தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் மே மாதம் 22 ஆம் தேதி உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடகிழக்கு நோக்கி நகர்ந்து மே 23ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, வடகிழக்கு நோக்கி நகர்ந்து மே 24ஆம் தேதி காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதன்பிறகு, வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மத்திய கிழக்கு வங்கக் கடலில் நேற்று (மே 25) காலை ரீமால் புயலாக மாறியது.
இந்த நிலையில், வங்கதேசத்திற்கு அருகே இன்று (மே 26) நள்ளிரவு ரீமால் புயல் தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, "வடக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ரீமால் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று (மே 26) காலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவடைந்தது.
இது வங்கதேசத்தின் கேபுபாராவிற்கு தென்-தென்மேற்கே சுமார் 290 கி.மீ தொலைவிலும், அந்நாட்டின் மோங்லாவில் இருந்து தெற்கே 330 கி.மீ தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு தென்-தென்கிழக்கே சுமார் 270 கி.மீ தொலைவிலும், திகாவில் இருந்து தென்-தென்கிழக்கே 390 கி.மீ தொலைவிலும், கேனிங்கிற்கு தென்-தென்கிழக்கே 310 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து, வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க கடற்கரையான சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே, தென்மேற்கே மோங்லா வங்கதேசத்துக்கு அருகே இன்று நள்ளிரவு தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. ரீமால் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கி.மீ வேகத்திலும் இடையிடையே 135 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் புயல் எச்சரிக்கை: ரீமால் புயல் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யானைகள் கணக்கெடுப்பு நிறைவு: தமிழ்நாடு உள்பட 4 மாநில யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?