மதுரை: மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட குக்கிராமம் ஒன்றில் வசித்து வரும் நுண் கலை ஓவியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து, 10 வயது மகன் மற்றும் 8 வயது மகளுடன் தனது கிராமத்தில் வசித்துவந்த நிலையில், அவரது மனைவி, வெறு ஒருவருடன் பல ஆண்டுகளாக திருமணம் கடந்த உறவில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
அப்போது, இது குறித்து காவல்நிலையமொன்றில் விசாரணை நடைபெற்றுள்ளது. அச்சமயம் நுண் கலை ஓவியரின் மனைவியோடு வந்த நபர்கள் சிலரைச் சுட்டிக்காட்டி அவரின் 8 வயதுடைய மகள், தன்னை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லியிருக்கிறார். இதனைக் கேட்டு துடித்துப்போன சிறுமியின் தந்தை, சிறுமியிடம் அதுவரை நடந்த சம்பவங்கள் குறித்து பெண் காவலர்கள் விசாரித்தபோதுதான், பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து, நீதி வேண்டி அந்த சிறுமியின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டபோது, பல்வேறு வகையிலும் அலைக்கழிக்கப்பட்டு, இறுதியாக சம்மந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி எஸ்பி அலுவலகம் மற்றும் சைல்டு லைன் அழுத்தத்தின் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் கூறுகையில், "எஃப்ஐஆர் பதிவு செய்து 10 மாதங்களாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எஸ்.பி., டிஐஜியிடம் முறையீடு செய்தேன். அதற்குப் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 3 முறை மனு கொடுத்துள்ளேன். எஸ்.பி. அலுவலகத்தில் ஏழு முறையும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு 5 முறையும் மனு அளித்துள்ளேன்.
ஆனால், என் குழந்தையைச் சீரழித்த நபர்கள் அனைவரும் போக்சோ வழக்கிலிருந்து முன் ஜாமீன் பெற்று சுதந்திரமாக வெளியே உள்ளார்கள். இதுவரை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக என் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப இயலாத சூழல் உள்ளது.
இதையும் படிங்க: சமூக வலைத்தளங்களில் இளம் பெண்களை குறிவைத்து மோசடி செய்யும் கும்பல்!
மேலும், என் மகள் பயிலும் பள்ளிக்கும், என் வீட்டிற்கும் வந்து மிரட்டுவதோடு, குழந்தையைக் கடத்துவதற்கு தொடர்ந்து முயல்கிறார்கள். எந்நேரமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழுகின்ற நிலைக்கு நானும் எனது குழந்தைகளும் தள்ளப்பட்டுள்ளோம்.
இதற்கு முன்பாக ஒரு முறை எனது மகனை இவர்கள் கடத்திக் கொண்டு சென்றபோது, எப்படியோ தப்பி எங்களிடம் வந்து சேர்ந்தான். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, என் மகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இவர்களால் அச்சுறுத்தல் நேரலாம் எனக் கருதுகிறேன்.
என் குழந்தைகள் சுதந்திரமாக பள்ளி செல்லும் சூழ்நிலை இல்லை. ஆகையால், தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குறிப்பிட்ட அந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் முதலமைச்சர் தலையிட்டு எனது குழந்தைக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டுகிறேன். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நானும் எனது குழந்தைகளும் தலைமைச் செயலகத்திற்கே வந்து போராட வேண்டிய நிலை ஏற்படும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான செல்வகோமதி கூறுகையில், "முதன் முதலில் பாதிக்கப்பட்ட குழந்தையோடு அவரது தந்தை என்னிடம் சட்ட ஆலோசனை பெறுவதற்காக வந்தார். அப்போது அவரிடம் எந்த ஆவணமும் இல்லை. இதனால், குழந்தையிடம் நான் நடத்திய உரையாடலின் வாயிலாக அக்குழந்தைக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை அறிந்துகொள்ள முடிந்தது.
குற்றவாளிகளைக் கைது செய்வது ஒருபுறமிருந்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கான மறுவாழ்வு, ஆற்றுப்படுத்தல், குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடமிருந்து பாதுகாப்பு கொடுத்தல் என்பது அரசின் கடமை. அதைத்தான் போக்சோ சட்டமும் வலியுறுத்துகிறது. ஆனால், இத்தனை நாளாகியும்கூட குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை.. திருமணமான ஆறே மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு.. வெளியான பகீர் ஆடியோ!
இது அரசின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை இழக்க வைக்கும் செயல். ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை தொலைப்பேசியில் பேசும்போது அவரது குரலில் தொனிக்கும் அவநம்பிக்கையை சொற்களால் கடந்துவிட முடியாது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போக்சோ போன்ற நல்ல சட்டங்கள் வந்த பிறகும்கூட பெண் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்பது வேதனைக்குரியது.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை. இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு அந்தக் குழந்தைக்கான ஆற்றுப்படுத்தலும், மறுவாழ்வும் மிக மிக அவசியம். ஆகையால், பாதிக்கப்பட்ட குழந்தைக்கான நீதிக்கு உடனடி செயல்பாடுகள் அவசியம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்