திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி இன்று (மார்ச் 28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்து, கடந்த 19ஆம் தேதி முதல் களப்பணி ஆற்றி வருகிறது.
அதே வேளையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளிக்கிறது. புலம்பெயர்ந்து அங்கு வாழ்ந்து வரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார்கள்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு, பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு கேட்ட சின்னம் கொடுப்படுகிறது. ஆனால், மற்ற கட்சிகளுக்கு கேட்ட சின்னம் தராமல் தேர்தல் ஆணையம் இழுத்தடிக்கிறது.
அதேபோல், தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி தனக்கு சாதகமாக உள்ள மாநிலங்களுக்கு ஒரு தேதியும், சாதகம் இல்லாத மாநிலங்களுக்கு மற்றொரு தேதியையும் அறிவித்துள்ளனர். மேலும், கட்சியில் தகுதியான ஆட்கள் இல்லாதது போல, ஆளுநரை ராஜினாமா செய்ய வைத்து, தேர்தலில் போட்டியிட வைப்பது என்பது ஆரோக்கியமற்ற செயல்.
அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெறும் பட்சத்தில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்போது செலவழிக்கப்படும் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2024; டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு! - Delhi Capitals Vs Rajasthan Royals