சென்னை: மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மின் பயனாளிகளின் வீடுகளில் பொருத்துவதற்காக ஸ்மார்ட் மின் மீட்டர்கள் கொள்முதல் செய்ய கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டான்ஜெட்கோ டெண்டர் கோரியது. இந்த டெண்டர் ஆவணங்களில், தொழில்நுட்ப டெண்டர் மற்றும் நிதி டெண்டர் ஆகிய இரண்டையும் திறந்து ஒப்பந்ததாரரை இறுதி செய்த பிறகு, அதைவிடக் குறைந்த தொகையில் டெண்டர் கோரும் வகையில் ஏலம் நடைமுறையைப் பின்பற்றப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எதிர் ஏலம் நடைமுறை டெண்டர் வெளிப்படைத் தன்மை சட்டத்திற்கு விரோதமானது எனக் கூறி ஹைதராபாத்தைச் சேர்ந்த எஃபிகா (EFICA) என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எதிர் ஏல நடைமுறை டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, மின் மீட்டர்கள் கொள்முதல் தொடர்பான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, டான்ஜெட்கோ தரப்பில் மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, டான்ஜெட்கோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டு, டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். மேலும், எதிர் ஏலத்திற்கு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் எந்த விதத்திலும் தடை விதிக்கவில்லை என்றும், சட்டத்திற்கு விரோதமானது என்றும் தெரிவிக்கவில்லை என்பதால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய வம்சாவெளியினருக்கு சிறைத் தண்டனை... போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தீர்ப்பு!